மாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு.. எப்போது? எப்படி விரதம் இருந்தால் அம்மன் அருளை முழுமையாக பெறலாம்..

By Ma Riya  |  First Published Feb 22, 2023, 10:42 AM IST

Karadaiyan nombu 2023: காரடையான் நோன்பு எப்போது இருக்க வேண்டும்.. என்னென்ன பலன்கள் முழுவிவரம்..


காமாட்சி அம்மனுக்குதான் பெண்கள் காரடையான் நோன்பு இருப்பர். கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைத்து தாங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க இந்த நோன்பிருந்து பெண்கள் வேண்டிக் கொள்வார்கள். சாவித்திரி விரதம், கெளரி விரதம், காமாட்சி விரதம், மாங்கல்ய நோன்பு உள்ளிட்ட பல பெயர்களால் காரடையான் நோன்பை குறிப்பிட்டு அழைக்கிறார்கள்.  

காரடையான் நோன்பு வரலாறு 

Tap to resize

Latest Videos

இந்த நோன்பை பற்றி சொன்னாலே சத்யவான், சாவித்ரி கதை தான் பலரின் நினைவில் அலையாடும். எழில் கொண்ட இளவரசி சாவித்ரி, அண்டை தேச இளவரசன் சத்யவான் மீது காதல் கொண்டு மணம் முடிக்கிறாள். இந்த திருமணம் நடைபெற்ற கொஞ்ச நாளில் சத்யவானின் பெற்றோருக்கு கண் பார்வை பறிபோய் விடுகிறது. உடல் நலம் மட்டுமில்லாமல், அவர்களின் தேசத்தையும் இழந்துவிடுகிறார்கள். இதனால் வனத்தில் தன் கணவருடன் சாவித்திரி வாழ்ந்தாராம். அப்போது சீக்கிரமே தன் கணவரும் இறக்க போகிறார் என சாவித்திரி அறிந்து கொள்கிறாள். 

அப்போது தான் காமாட்சி அம்மனை நினைந்து மனமுருகி விரதம் எடுக்கிறாள் சாவித்ரி. வனத்தில் பெற்ற பொருள்களால் அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து, வழிபட்டு வந்தாள். சத்யவான் உயிரிழக்கும் நாள் நெருங்கியது. அன்றும் சாவித்திரி வழிபாடு செய்கிறாள். எம தர்மராஜா சத்யவானின் உயிரை எடுத்துவிட்டு புறப்பட்டார். அவரை தடுத்து கணவரின் உயிரை திருப்பித் தர எமனிடம் மண்டியிட்டு மன்றாடுகிறாள். 

சத்யவானுக்காக சாவித்ரி செய்த செயல்

இந்த மன்றாட்டு எமனை திடுக்கிட செய்தது. தான் ஒரு சாதாரண மானிட பெண் கண்ணுக்கு எப்படி தெரிகிறோம்? என எமன் குழம்பினார். இந்த பெண் தெய்வசக்தி படைத்தவளோ என எண்ணி, அவளுக்கு பதிலுரைத்தார். இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது. எமன் சத்யவானின் உயிரை கையில் கொண்டு எமலோகம் சென்றார். உடன் சாவித்ரி துரத்தி செல்கிறாள். 

 

ஒரு மானிட பெண் தன் பூத உடலுடன் எமலோகம் வந்ததை கண்டு மீண்டும் எமன் அதிசயித்து போகிறார். ஆனாலும் சத்யவானின் உயிரை கொடுக்க மாட்டேன் என பிடிவாதம் செய்கிறார். ஆனால் சாவித்ரி மனம் தளரவில்லை. அப்போது சத்யவானின் உயிரை தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் என எமன் கேட்க, சாவித்ரி,'பதிவிரதை நான். எனக்கு புத்திரப்பாக்கியம் வேண்டும். மாமானார், மாமியாருக்கு பார்வைத்திறன், எங்கள் தேசம் மீண்டும் எங்களுக்கே வேண்டும்'என பல வரங்களை சாவித்திரி கேட்கிறாள். 

அனைத்தையும் தருவதாக கூறி நகர்ந்த எமனை மீண்டும் சாவித்ரி தடுக்க, எமன் குழப்பமுற்றார். பாதி வரம் தான் தந்ததாக சாவித்ரி கூற, அப்போது தான் எமனுக்கு நினைவுக்கு வருகிறது சாவித்ரி பதிவிரதை என்று சொல்லி புத்திரபாக்கியம் கேட்டது. கணவனின் உயிரை மீட்டு கொண்டு வர சாவித்ரி கேட்ட வரம் அவளின் மதிநுட்பத்தின் சான்று. அவளுக்கு எமனிடன் போய் பேச துணிவு கொடுத்தது தெய்வசக்தி. இதை வியந்த எமன் சத்யவானின் உயிரை திரும்ப கொடுக்கிறார். கணவரின் உயிரை எமனிடம் போராடி சாவித்ரி மீட்ட நாளையே காரடையான் நோன்பாக கொண்டாடுகிறார்கள். 

எப்போது காரடையான் நோன்பு இருக்க வேண்டும்? 

மாசி மாதத்தின் கடைசி நாளும், பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் தினத்தில் தான் காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது. 2023ஆம் ஆண்டில் மார்ச் 15 ம் தேதி புதன்கிழமை என்று காரடையான் நோன்பு வருகிறது. அன்றைய தினம் காலை 06.29 மணி முதல் 06.47 மணி வரை வழிபாடு செய்ய வேண்டும். 

யாரெல்லாம் விரதம் இருக்கலாம் ?

பெண்கள் கண்டிப்பாக இந்த விரதம் இருக்கவேண்டும். சுமங்கலி பெண்கள் கணவர் நீண்ட ஆயுள் பெறவும், திருமணமாகாத பெண்கள் நல்ல துணை அமையவும் காரடையான் நோன்பு இருப்பார்கள்.  

இதையும் படிங்க: சாமி ஆடுறவங்க சொல்லும் அருள் வாக்கு நிஜமா பலிக்குமா? அது உண்மையா? பின்னணி என்ன?

காரடையான் நோன்பு இருப்பது எப்படி? 

  • அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜையறையில் காமாட்சி படம் அல்லது ஏதாவது ஒரு அம்மன் படத்திற்கு பூக்கள் வையுங்கள். அவர்களுக்கு பூச்சூட்டி வழிபட வேண்டும். காலை முதலாகவே நோன்பை உபவாசம் இருந்து தொடங்குவது நல்லது. 
  • நம் வீட்டில் உள்ள அம்பாள் படத்திற்கு முன்னால் வெற்றிலை பாக்கு, மஞ்சள் சரடு வைத்து வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். காமாட்சி விருத்தம் பாடவேண்டும். மஞ்சள் சரடியில் 2 மல்லிகை பூ அல்லது ஏதேனும் ஒரு பூ வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். இதனை அம்மாள் படத்தின் முன் வைத்து வழிபட வேண்டும். பின்னர் அக்கயிற்றை கணவரிடம் ஆசி பெற்று, அவர் கையால் கட்டிக் கொள்ள வேண்டும். 

  • ஒருவேளை கணவர் வெளியூரில் இருந்தாலோ, விரதம் இருப்பவர் திருமணமாகாத பெண்களாக இருந்தாலோ வீட்டில் இருக்கும் மூத்தோரிடம் ஆசி பெற்று அந்த கயிரை கழுத்திலோ, கையிலோ நீங்களே கட்டிக் கொள்ளலாம். 
  • விசேஷமான இந்த நாளில் தாலி சரடும் கூட மாற்றிக் கொள்ளலாம். இந்த நோன்பிற்காக கட்டிய மஞ்சள் சரடை எப்போதும் அணிந்து கொள்ளலாம். குறைந்தபட்டம் 3 நாட்கள் அணிந்து விட்டும் கழற்றி விடலாம். 
  • கார அடை, இனிப்பு அடை ஆகியவை அம்மனுக்கு படைக்கலாம். உருகாத வெண்ணைய் காமாட்சி அம்பாளுக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

இதையும் படிங்க: நீங்கள் ஒருமுறை போனால் போதும், எல்லா பிரச்சனையும் தீரும்.. சக்தி வாய்ந்த கும்பகோணம் கோயில்கள் பற்றி தெரியுமா?

click me!