Kandha sashti viratham 2022: கந்த சஷ்டி விரதம் இன்று முதல் தொடங்குகிறது. குணப்படுத்த முடியாத பிணிகள் முதல் குழந்தை வரம் வரை வேண்டியதை அளிக்கும் எம்பெருமான் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருப்பவர்கள் இன்று விரதத்தை தொடங்கும் முறையை அறிந்துகொள்வோம்.
இன்று தொடங்கும் கந்த சஷ்டி விரதம் அக்டோபர் 31 வரை கடைப்பிடிக்க வேண்டும். இன்று கடைப்பிடிக்கும் இந்த விரதம் சூரசம்ஹாரத்துடன் நின்று விடாமல் தொடர்ந்து 7 நாட்கள் வரை இருக்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்ய பெருமக்கள்.
கந்த சஷ்டி விரதம் மகிமைகள்
கந்த சஷ்டி விரதத்தின் மகிமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்து சஷ்டியில் முருகப்பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ள வேண்டும். முருகப்பெருமானின் சிறப்பான நோன்பான இது பெரிய நோன்பாக ஐப்பசி மாதத்தில் தொடர்ந்து 6 தினங்கள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐப்பசி மாத தீபாவளியின் அமாவாசை பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் அனுஷ்டிக்கப்படும் . பிறகும் திருக்கல்யாணம் வரை நீடிக்க வேண்டும். இந்த விரதத்தை முறையாக அனுஷ்டிப்போருக்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். இன்று தொடங்கும் இந்த விரதத்தை எப்படி தொடங்குவது என்று பார்க்கலாம்.
கந்த சஷ்டி விரதம் தொடங்கும் முறை
தீபாவளி கேதார கெளரி நோன்பு இருப்பவர்கள் நோன்பு முடித்த அன்று விரதத்தை தொடங்கலாம். இன்று சூரிய கிரகணம் என்பதால் நீங்கள் நோன்பு முடித்து பிறகு கிரகணம் முடிந்த பிறகு மாலையில் தொடங்குங்கள்.
நோன்பு இல்லாதவர்கள் இன்று காலையே விரதத்தை துவங்கிவிட வேண்டும்.
செல்வம் பெருக காரணமாய் இருக்கும் காயத்திரி மந்திரம் .. தினமும் சொல்லுங்க!
காப்பு கட்டுவது அவசியமா?
பொதுவாகவே விரதம் என்பது நீண்ட நாட்கள் தொடரும் போது விரதம் தங்கு தடையின்றி நல்ல விதமாக நிறைவு பெறவே காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. உள்ளூர் திருவிழா முதல் பெரு விரத நிகழ்வு வரை காப்பு கட்டி இருப்பர்.
காப்பு கட்டுபவர்கள் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் தங்கி விரதத்தை தொடங்கி அங்கேயே நிறைவு செய்ய விரும்பினால் அங்கு சென்று காப்பு கட்டி கொள்ளலாம். அல்லது அருகில் இருக்கும் கோவிலில் சென்று சங்கல்பம் செய்து காப்பு கட்டி விரதத்தை தொடங்க வேண்டும்.
காப்பு கட்ட முடியாதவர்கள் வீட்டில் முருகன் திருவுருவ படத்துக்கு முன் நின்று விரலி மஞ்சள் கிழங்கை கயிற்றில் கட்டி சுவாமி படத்துக்கு முன்பு வைத்து கையில் கட்டி கொண்டு முருகனை நினைத்து விரதத்தை தொடங்கலாம். விரதத்தின் இறுதி நாளில் காப்பை நீர் நிலைகள் இருக்கும் இடத்தில் போட்டுவிடலாம்.
காப்பு கட்டாமலும் விரதம் இருக்கலாம்.
ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம்!!
கலசம் வைக்க வேண்டுமா?
குடும்ப வழக்குப்படி கலசம் வைத்தும் வழிபடுபவர்கள் கலசம் வைத்து வழிபடலாம். அல்லது சுவாமி படத்தை மட்டும் வழிபடுபவர்கள் படத்தை சுத்தமாக வெள்ளைத்துணியில் துடைத்து மஞ்சள் குங்குமம் வைத்து மலர் அலங்காரம் செய்து வழிபடலாம்.
விரதம் தொடங்குவதற்கு முன்பு
விடியற்காலை எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து நீர் நிலைகளில் இறங்கி ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்தப்படி முருகனை நினைத்து நீரில் மூழ்கி எழ வேண்டும்.
கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று ஓம் என்னும் மந்திர்ம் சொல்லி தூய நீராடி சுத்தமான ஆடை (பச்சை அல்லது காவி நிற ஆடை) அணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து முருகப்பெருமானை நினைத்து தியானம் செய்ய வேண்டும்.
வீட்டில் ஓம் என்றும் சரவணபவ என்றும் எழுதி விரதம் நிறைவு செய்யும் வரை எனக்கு துணையாக இரு முருகா என்று முருகனை வேண்டி இருக்க வேண்டும்.
இன்றைய நாளில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தனுபூதி, கந்தர் கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களை படிக்க வேண்டும். முருகன் கோவிலில் கந்தபுராண படனம் நடைபெறும். அதை கேட்கலாம்.
விரதம் இருக்கும் முறை
இந்த ஆறு நாட்களும் உபவாசம் இருப்பது அதி உத்தமம் என கருதப்படுகிறது. முதல் நாள் முதல் மிளகு என்று தொடங்கி விரதம் இருக்கலாம். பழம் மட்டும் சாப்பிட்டு தீர்த்தம் குடிக்கலாம். இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் எடுத்துகொள்ளலாம். ஆனால் ஆறாவது நாள் மட்டும் பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.