தீபாவளி பண்டிகை இந்தாண்டு அக்டோபர் 24 ஆம் தேதி வருகிறது. ஒவ்வொரு முறையும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. எப்படி தீபாவளி பண்டிகை அன்று பல விரதங்களும், பூஜைகளும் மேற்கொள்வது வழக்கமாக இருக்கிறதோ அதேபோன்று தான் தீபாவளிக்கு முதல் நாள் பிரதோஷ தரிசனம் செய்வதும் விஷேசமானது என்று புராணங்கள் சொல்கிறது. அதேபோன்று அந்த நாளில் யமதீபம் ஏற்றி வழிபடுவதால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாடுகளில் முக்கியமானது இது. இந்த தீபம் ஏற்றும் போது பித்ருக்களின் சாபம் நீங்கும் என்பது ஐதிகம். முன்னோர்களின் ஆன்மா சாந்திக்காக செய்யப்படும் முக்கிய வழிபாட்டில் இந்த யம வழிபாட்டு முறையும் உள்ளது.
இந்த விளக்கை உயரமான இடங்களில் ஏற்ற வேண்டும். வீட்டில் சுவாமி படங்களுக்கு முன்பு தங்களின் முன்னோர்களை நினைத்து ஏற்றலாம். இந்த யம தீபங்களுக்கு திரியாக தாமரைத்தண்டு திரி பயன்படுத்த வேண்டும். தீபங்கள் எரிய நெய் பயன்படுத்த வேண்டும்.
இந்த யம தீபங்கள் எட்டு அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும். இதனால் யம லோகத்தில் வாழும் முன்னோர்களின் ஆன்மா ஒளிபெறும். அவர்கள் தங்கள் வழித்தோன்றலை வாழ்த்துவார்கள் என்னும் நம்பிக்கை நம் சாஸ்திரத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. யம தீபம் ஏற்றும் போது
ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷ்யாயச
ஒளதும்ப்ராய தத்னாய நீலாய பரமேஷ்டினே
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகும்பதாய வை ஓம் நம இதி:
இந்த மந்திரம் சொல்லலாம். அல்லது சிவாய நம என்று சொன்னால் கூட போதுமானது.
இவையனைத்தையும் குறித்து விளக்கமாக கூறியவர் ஒரு முனிவர். வரலாறை தெரிந்துகொள்வோம்.
தீபாவளி 2022 : தீபாவளியன்று எண்ணெய் குளியல் ஏன்? எப்போது செய்ய வேண்டும்..
ஒரு சோலைக்கு நடுவில் அமைந்திருந்த ஆசிரமத்தில் தான் தீர்க்கதமஸ் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். கடுமையான தவம் புரிந்த வந்த இந்த முனிவருக்கு அவரின் மனைவி, மக்கள் மற்றும் அவரின் சீடர்களும் உறுதுணையாக இருந்தனர். அப்போது ஒருமுறை தீர்க்கதமஸுக்கு சற்றும் எதிர்பாராத நிலையில் தனது ஆசிரமத்துக்கு வந்த சனாதன முனிவரை வரவேற்று பாத பூஜை செய்து உணவளித்தார். அதையடுத்து தனக்கு ஒரு நல்ல மார்க்கத்தைக் கூறுமாறு தீர்க்கதமஸ் சனாதன முனிவரிடம் வேண்டினார்.
தீபாவளி அன்று இந்த மந்திரங்களை சொல்லுங்கள்.. உங்கள் வாழ்க்கையில் இருள் நீங்கும்!
சனாதன முனிவரும், ‘‘நமது வாழ்வில் துன்ப இருளை அகற்றி, இன்ப ஒளியேற்றும் ஒரு விரதம் உள்ளது. அதைக் கடைப்பிடித்து வந்தால் எல்லாம் நலமுடன் நடக்கும். இவ்விரதம் மேற்கொள்வது அவ்வளவு கடினமானது அல்ல.. மிக எளிமையாகக் கடைப்பிடிக்கக் கூடியது தான். தீபாவளிக்கு முதல் நாளான, துலா மாதம் தேய்பிறை திரயோதசி அன்று மகா பிரதோஷ பூஜை செய்து, எம தேவனை வழிபட்டு எம தீபம் ஏற்ற வேண்டும். இதனால் நம் வாழ்வு நலம் பெற்று, நரகத்தில் உலாவரும் நம் முன்னோர்கள் சொர்க்கம் செல்வதற்கும் வழி பிறந்து, முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
மறுநாள் தீபாவளி எனும் நரக சதுர்த்தி அன்று உஷத் காலத்தில் அதாவது உதய காலத்திற்கு முன் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், "நரக சதுர்த்தி (தீபாவளி) என்ற உஷத் காலத்தில் பெரும்பாலும் சுவாதி நட்சத்திரத்தில் சூரியனும், சந்திரனும் சஞ்சரிப்பதால் இதனை புனித நாள் என்று கூறுகின்றனர். இந்த புனித நாளில் கடைபிடிக்கப்படும் விரத வழிபாடுகளால் பலன்களும் அதிகரிக்கும். அதோடு இந்த புனித நாளன்று எண்ணெயில் திருமகளும், சந்தனத்தில் நிலமகளும், அரப்புப் பொடியில் கலைமகளும், மலர்களில் மோகினிகளும், குங்குமத்தில் கௌரியும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், நீரில் கங்கையும், தீபத்தில் பரமாத்மாவும் உறைந்து, அருள் பாலித்து வருகிறார்கள்.
அதனால், இந்த நல்ல நாளில் எண்ணெய் வைத்து, அரப்புத் தூள் பயன்படுத்தி, வெந்நீரில் குளித்திட வேண்டும்! இதனால் கங்கை நதியில் ஸ்நானம் செய்த பலன் உமக்கு கிடைக்கும் என்று தீர்க்கதமஸிடம் தெரிவித்தார். பின்னர் புத்தாடை உடுத்தி, தீபம் ஏற்றி, இனிப்புகள் படைத்து இறை வழிபாடு செய்ய வேண்டும். இதுதான் தீபாவளி விரதம் என்று தெரிவித்தார். இதைக் கடைப்பிடித்து வந்தால் எல்லா விதமான இடையூறுகளும் நீங்கி விடும். ஆண்டுதோறும் விரத வழிபாட்டை கடைப்பிடிப்பத்தால், தோஷங்கள் விலகி நிம்மதியும் மகிழ்ச்சியும் கொண்ட வாழ்க்கை அமைந்திடும்!’’ என்று விளக்கமாக கூறினார். தீர்க்கதமஸ் சனாதன முனிவர் சொன்னபடி அனைத்தையும் கடைப்பிடித்து இறையருள் பெற்றார்.
சனாத முனிவர் சொன்னபடி அனைவரும் இந்த விரத வழிபாடுகளை கடைப்பிடித்து இறைவனின் அருளை பெறுவோம்.