வாருங்கள்! ஸ்ரீ ராமனுக்கு பிடித்த பானகத்தை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
மனிதர்களாகிய நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை தெரியப்படுத்தவே பகவான் மஹாவிஷ்ணு எடுத்த அவதாரம் தான் ராமாவதாரம் . இந்த பூலோகத்தில் ராமர் அவதரித்த அதாவது ராமர் பிறந்த நாளை தான் ராம நவமியாக ஒவ்வொரு வருடமும் நாம் கொண்டாடுகிறோம். பங்குனி மாதத்தில் புனர்பூசம் நட்சத்திரன்று நவமி திதியும் சேர்ந்து வரும் நாளில் தான் ஸ்ரீ ராமபிரான் பிறந்தார்.
இப்படியான சிறப்பான நாளில் விரதம் மேற்கொண்டு ஸ்ரீ ராமரை வழிபட்டால் செய்யும் செயலில் வெற்றியும், துன்பத்திலும் துவண்டு விடாத மன நிலையும், மகப்பேறு பாக்கியமும், தவிர நீங்கள் வேண்டிக் கொள்ளும் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பான நாளில், ஸ்ரீ ராமபிரானுக்கு மிகவும் பிடித்த பானகத்தை செய்து நெய்வேத்யமாக படைத்து ராமனின் அருள் பெறலாம்.
இந்த ராம நவமி திருநாளும், தமிழ் வருடப் பிறப்பும் கோடை காலத்தில் கொண்டாடப்படுவதால், நம் உடலினை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத் தான் இந்த பண்டிகை தினத்தில் பானகம் என்ற ஒரு உணவு வகை செய்யப்படுகிறது. வாருங்கள்! ஸ்ரீ ராமனுக்கு பிடித்த பானகத்தை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
வெல்லம் – 1/2 கப்
குளிர்ந்த தண்ணீர் – 2 கப்
எலுமிச்சை – 1
துளசி இலை – 5
சுக்குப் பொடி – 1/4 ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை
ஜாதிக்காய் பொடி – 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது குளிர்ந்த தண்ணீரில் பொடித்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அதில் எலுமிச்சை பழச் சாறு சேர்த்துக் கொண்டு,பின் அதில் சுக்குப் பொடி , ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
வடித்து வைத்துள்ள தண்ணீரில் இப்போது ஜாதிக்காய் தூள் சேர்த்து அதன் மேல் துளசி இலையை தூவினால் ஸ்ரீ ராமனுக்கு மிகவும் பிடித்த பானகம் ரெடி! இந்த பானகத்தை நாளைய தினம் செய்து, ஸ்ரீ ராமபிரானுக்கு படைத்து பின் அதனை வீட்டில் உள்ளவர்களுக்கும் , மற்றவர்களுக்கும் நெய்வேத்தியமாக கொடுத்து குடும்பத்துடன் மகிழ்வோடு கொண்டாடுங்கள்!