சோழர்களின் கட்டிடக்கலை, கட்டிடத் தொழில்நுட்பம் மற்றும் வானியல் ஆகியவற்றின் சிறந்த சான்றாக கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் விளங்குகிறது.
கும்பகோணம் என்பது ஒரு அழகிய கோயில் நகரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த காலத்தில் குடந்தை என்று அழைக்கப்பட்ட கும்பகோணத்தில் எங்கு திரும்பினாலும் வரலாற்று சிறப்புமிக்க கோயில்களை பார்க்கலாம்.தஞ்சையி மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பழங்கால இந்து கோவில்களுக்கு பெயர் பெற்ற நகரமாக உள்ளது.இந்தியாவின் மிகப் பழமையான நகரமான கும்பகோணம் மூன்றாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. கும்பகோணம் பகுதி 4 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை பல்லவ மன்னர்களின் கீழ் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பின்னர் எழுச்சி பெற்ற சோழர்கள் கும்பகோணத்தில் பல குறிப்பிடத்தக்க கோவில்களை கட்டினர். தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் சோழர்களின் கட்டிடக் கலைக்கு ஆகச்சிறந்த உதாரணமாகும்.
பன்னிரண்டாம் நூற்றாண்டின் மத்தியில் சோழப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பாண்டிய ஆட்சியின் கீழ் கும்பகோணம் இருந்தது. மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்கள் 1535 முதல் 1673 வரை கும்பகோணத்தின் மீது படையெடுத்தனர். எனினும் சோழர் காலம் கும்பகோணத்தின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. அந்தக் காலத்தில் கலை, கலாச்சாரம், இலக்கியம் போன்றவற்றில் நகரம் சிறந்து விளங்கியது.
நாகேஸ்வரர் கோயில்
அந்த வகையில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்த சோழன் கட்டிய நாகேஸ்வரர் கோயிலை பற்றி விரிவாக பார்க்கலாம். சோழர்களின் கட்டிடக்கலை, கட்டிடத் தொழில்நுட்பம் மற்றும் வானியல் ஆகியவற்றின் சிறந்த சான்றாக விளங்குகிறது. நாகேஸ்வரன் கோவிலின் முக்கிய தெய்வம் நாகேஸ்வரர் சுவாமி. இக்கோயில் ஆரம்பகால சோழர் கலையை அதன் சிறந்த வடிவத்தில் குறிப்பாக மனித உருவங்களின் சிலை வடிவத்தில் காட்டுகிறது. சிவபெருமானின் தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 90-வது தேவார தலமாகும். காவிரி தென்கரை திருத்தலங்களில் 27-வது தளமாகும்.
வாழ்வில் ஏற்றம் தரும் சக்திவாய்ந்த முருகன் கோயில்.. இங்கு சென்றால் பதவி உயர்வு கிடைக்குமாம்..
3 நாட்கள் மட்டுமே லிங்கத்தின் மீது படும் சூரிய ஒளி
நாகேஸ்வரர் கோயில் தனது கட்டிடக்கலைக்கு உலகப் புகழ் பெற்றது. சித்திரை மாதம் 11,12, 13 ஆகிய தேதிகளில் மட்டும் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது சூரியஒளி படும் வகையில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த நாட்களில் சூரிய பகவான் வந்து இந்த கோயிலில் வழிபடுவதாக நம்பப்படுகிறது. இதனால் இங்கு ஆண்டுதோறும் சூரிய விழா நடைபெறுவது வழக்கம். இந்த நாட்களில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் சிவபெருமானின் அருள் பெற வருகிறார்கள்.
தேர் வடிவ நடராஜர் மண்டபம்
நாகேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் 5 நிலைகளை கொண்டது. இந்தக் கோயில் கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் இரண்டு கோபுரங்களைக் கொண்டுள்ளது. இடப்பக்கம் நந்தவனமும், சிங்கமுக கிணரும். வலப்பக்கம் பிருகன்நாயகி சன்னதியும் நடராஜர் சபையும் உள்ளது. இந்த நடராஜ மண்டபம் தேர் வடிவத்தில் நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கும். அதில் இருக்கும் 12 கரங்கள் 12 ராசிகளை குறிக்கும். 2 குதிரைகள், 4 யானைகள் இழுக்கும் நிலையில் உள்ள இந்த மண்டபத்திற்கு ஆனந்த தாண்டவ மண்டபம் என்ற பெயரும் உள்ளது. நடராஜனின் நடனத்திற்கு ஏற்ப தாளம் போடும் பாவனையில் சிவகாமி அம்மையும், நடராஜர் அருகில் மகாவிஷ்ணு குழல் ஊதும் காட்சியும் அங்கு செல்லும் பக்தர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது.
பழுவேட்டரையருக்கு சிலை :
மேலும் இந்த கோயிலில் மாரியம்மன், அய்யனார், விநாயகர், சப்த லிங்கங்கள், வைத்தீஸ்வரர், அர்த்த நாரீஸ்வரர் பிரம்மா என அனைத்து தெய்வங்களையும் தரிசிக்கலாம். ராகு தோஷம் உள்ளவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமையில் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால், ராகு தோஷம் நீங்கும் என்று கூறப்படுகிறது. திருமணம் தடை நீங்கி, குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் இந்த கோயிலில் சின்ன பழுவேட்டரையருக்கும் சிலை உள்ளது. பொன்னியின் செல்வன் நாவல் படித்தவர்களுக்கும், படம் பார்த்தவர்களுக்கும் நிச்சயம் பழுவேட்டரயரை பற்றி தெரிந்திருக்கும். சோழர்களின் குறுநில மன்னர்களில் ஒருவர் ஆவார். இவரின் சிலை மூலவருக்கு பின்புறம் உள்ளது. சோழர்களின் காலத்தில் செதுக்கப்பட்ட மிக அழகான பெண் சிற்பங்கள் என்று இந்த கோயிலில் தான் உள்ளது என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் உள்ளனர்.
கோயிலின் முக்கிய திருவிழாக்கள் :
மகாமக குளத்திற்கு இறைவன் வரும் தீர்த்தவாரி என்பது இந்த கோயிலின் முக்கிய மற்றும் முக்கியமான திருவிழாவாகும். ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் புரட்டாசி நவராத்திரி, டிசம்பர்-ஜனவரியில் மார்கழி திருவாதிரை மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பங்குனி பெருவிழா ஆகியவை கோயிலின் பிற திருவிழாக்கள். மகாமகத்தன்று சுவாமி, இந்த கோயிலில் மகாமக குளத்திற்கு தீர்த்தவாரிக்கு செல்வது மிகப்பெரிய விசேஷம். இதுதவிர நவராத்திரி, திருவாதிரை, பங்குனி பெருவிழா ஆகியவை கோயிலின் முக்கிய பண்டிகைகள் ஆகும்.