
திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கிரிவலப் பாதையின் சுகாதாரம், பொருளாதாரம், ஆன்மிக சூழல் ஆகியவை சமீபகாலமாக கடுமையான சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக கிரிவலப் பாதை முழுவதும் பாஸ்ட் ஃபுட் ஸ்டால்கள் வரிசையாக தோன்றியுள்ளதால், அப்பகுதி முழுவதும் குப்பை, பிளாஸ்டிக், உணவு மீதி எங்கும் பரவியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வளைத்துச் சொல்கின்றனர்.
உண்மையை நேரடியாக பேசிய சொற்பொழிவாளர்
விரதமிருந்து கிரிவலம் செய்யும் பக்தர்களின் ஆன்மீக யாத்திரையை பாஸ்ட் புட் உணவுகள் ஆக்கிரமித்துவிட்டன என்ற ஆழமான குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை ஒட்டி சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் பேசும் சொற்பொழிவாளர், “கிரிவலம் என்பது லாக்டவுனில் மட்டுமே செய்ய கூடிய விஷயம் போல ஆகிவிட்டது. இந்திர லிங்கத்திலிருந்து 1 கிலோமீட்டர் சென்றால் பாப்கார்ன். அடுத்த கிலோமீட்டர் முருக்கு. மேலும் 1 கிலோமீட்டர் சென்றால் இட்லி, சாம்பார், சட்னி. பரோட்டா, காளான், கோத்து பரோட்டா, சில்லி… கிரிவலப் பாதை முழுவதும் சாப்பாட்டு சந்தை!” என வலியுறுத்துகிறார்.
அண்ணாமலையார் வந்தா, தூக்கிப் போட்டு மிதிப்பார்
அவர் மேலும், “14 கிலோமீட்டர் கிரிவலம் முடிக்கும் போது, பக்தர்களுக்கு ஆன்மிக பாவனைக்கு பதிலாக சாப்பாட்டு நினைவுகள்தான் பெருகுகிறது. அண்ணாமலையார் வந்தா, தூக்கிப் போட்டு மிதிப்பார்!” என்று சுட்டிக்காட்டுகிறார்.கிருபானந்த வாரியார் கூறிய ஒரு புகழ் பெற்ற சொற்களை மேற்கோளாகவும் அவர் நினைவூட்டுகிறார்: “கிரிவல்பாதையில் நடக்கும்போது குடும்பத்தை மறக்க வேண்டும், கவலைகளை மறக்க வேண்டும், படிப்பையும், பணத்தையும் மறக்க வேண்டும். உடம்பில் உயிரே உள்ளதை மறந்து தியானம் செய்யும் அளவுக்கு பக்தி இருக்க வேண்டும் – அதுதான் உண்மையான கிரிவலம்.”
ஆனால், தற்போதைய நிலை அதற்கு முற்றிலும் எதிர்மறையானதாகி வருவதை பக்தர்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
கிரிவல பாதை முழுவதும் குப்பை கொட்டப்படும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. உணவுக் கடைகளின் மீதி, பிளாஸ்டிக் கப்புகள், தட்டு, தண்ணீர் பாட்டில்கள் என பாதையில் செல்லும் பக்தர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது.
இனியாவது மாற்றம் வேண்டும்
ஆன்மிக யாத்திரை மாற்றம் அடைந்துவிட்டது என பக்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எப்போதும் பக்தர்களால் நிரம்பி இருப்பது மட்டுமல்ல, அங்குள்ள உணவு வியாபாரமும் கட்டுப்பாட்டின்றி அதிகரிக்கும் நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் இந்த பிரச்சினையை சீரமைத்து, ஆன்மிக யாத்திரையின் உண்மையான தன்மையை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.