பொதுவாக முருகன் கோயில்களுக்கு செல்லும் போது ஏற்றமாகவும், திரும்பி வரும் போது இறக்கமான பாதையாகவும் இருக்கும்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கப்பட்ட என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாதாள செம்பு முருகன் கோயில் அமைந்துள்ளது. பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் இந்த கோயில் கருவறை அமைந்துள்ளது. அதில் 17-க்கு 21 அடி என்ற கணக்கில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. அதில் 8-க்கு 8 என்ற அளவிலான கருவறையில் முருகன் வீற்றிருக்கிறார். பூமிக்கு அடியில் அதாவது பாதாளத்தில் செம்பினாலான முருகன் சிலை உள்ளது. இதனால் இது பாதாள செம்பு முருகன் என்ற பெயர் உருவானது.
பழனியில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ராமலிங்கம்பட்டியில் திருக்கோவிலூர் சித்தர் வசித்து வந்துள்ளார். இவர் 600 ஆண்டுகளுக்கு முன்பு 1.5 அடி உயரத்தில் உலோகத்திலான முருகன சிலையை வடிவமைத்து பாதாள அறையில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்துள்ளார். ஆனால் நாளடைவில் வழிபாடு இல்லாமல் போன இந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ராமநாதபுரம் சமஸ்தானத்தில் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதியின் வம்சாவளியில் வந்த கந்தமாறன் என்ற மிராசுதாரர் மீண்டும் பூஜைகள் நடைபெற செய்தார்.
இந்த கோயிலுக்குள் நுழையும் 12 அடி உயர சங்கிலி கருப்பு சிலை இருப்பதை நம்மால் பார்க்க முடியும். உலகிலேயே முருகன் கோயிலில் சங்கிலி கருப்பு சிலை இருப்பது இங்கு மட்டும் தான். மேலும் கோயிலின் முன்பு ஜலகண்டேஸ்வரர் சிலையும் உள்ளது. அதை தொடர்ந்து கால பைரவர் சிலையும் இருக்கும். அதனை தாண்டி செல்லும் போது 16 அடி ஆழத்தில் முருகனை 18 படி கொண்ட குகையில் இறங்கி சென்றால் பாதாள செம்பு முருகனை தரிசிக்கலாம்.
பொதுவாக முருகன் கோயில்களுக்கு செல்லும் போது ஏற்றமாகவும், திரும்பி வரும் போது இறக்கமான பாதையாகவும் இருக்கும். ஆனால் இந்த பாதாள செம்பு முருகன் கோயிலில் இறங்கி சென்று முருகனை தரிசித்துவிட்டு, ஏற்றமான பாதையில் வருவது சிறப்பு. இது நம் வாழ்விலும் ஏற்றத்தை கொடுக்கும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்கு 9 வாரங்கள் தொடர்ந்து சென்றால் நினைத்த காரியம் கைக்கூடும் என்பது நம்பிக்கை.
பல முன்னணி நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் முக்கிய அதிகாரிகள் இந்த கோயிலுக்கு செல்வதாக கூறப்படுகிறது. பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கோயிலில் முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கருங்காலி மாலை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கருங்காலி மாலைகளை அணிவதன் மூலம் திருமண தடை நீங்கும் எனவும், குழந்தை பேறு கிடைக்கும் என்றும் செல்வம் பெருகும் என்றும் நம்பப்படுகிறது. மேலும் பஞ்ச பூதங்களின் துணை கிடைப்பதுடன் வீடு நிலம் சொத்துக்கள் சேரும் எனவும் ராகு, கேது செவ்வாய் தோஷம் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. மன அழுத்தம் குறைவதுடன் ரத்த அழுத்தம் சீராகும் என்றும் நம்பப்படுகிறது.