பழனி மலைக் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் முருகன் கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் மீண்டும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி இந்து அல்லாதோர் மற்றும் மாற்று மதத்தினர் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த சட்டமானது இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பழனி பேருந்துநிலையம் அருகே பழக்கடை நடத்திவரும் சாகுல் என்பவர் சென்னையில் இருந்து வந்த தனது உறவினர்கள் சிலரை பழனி மலைக்கோவிலுக்கு அழைத்து செல்வதற்காக அடிவாரத்தில் உள்ள மின்இழுவை ரயில் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது டிக்கெட் கவுண்டர் அருகே சென்றபோது மாற்றுமதத்தினர் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பழனியை சேர்ந்த பழக்கடை உரிமையாளர் சாகுல் அதிகாரிகளுடனும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து இந்துமுன்னனி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மின்இழுவை ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசி மலைக்கோவிலுக்கு செல்ல முடியாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அடிவாரம் காவல் துறையினர் இந்து அமைப்பினரை சமாதானம் செய்தனர். மேலும் மலைக்கோவிலுக்கு செல்ல வந்த மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களை கோவிலுக்கு செல்ல முடியாது என்று தெரிவித்தனர்.
பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த கொடூரம்; மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்
இதையடுத்து சாகுலுடன் வந்தவர்கள் காரில் ஏறி சென்றனர். கும்பாபிசேகத்திற்கு முன் வரை இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கபடும் என்ற பதாகை இருந்த நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக அந்தப் பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த பிரச்சினை காரணமாக மீண்டும் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் மாற்று மதத்தினர் யாரும் உள்ளே வரக்கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
மெலிந்த தேகம்; எலும்பும், தோலுமாக காணப்படும் அரிசி கொம்பன் - வனத்துறை விளக்கம்
பழனிகோவிலின் புனிதம் மற்றும் பாதுகாப்பு கருதி மின்இழுவை ரயில், ரோப்கார் மற்றும் படிவழிப்பாதையில் பாதுகாப்பு அதிகப்படுத்த வேண்டும் என்றும், இந்து அல்லாதோர் மற்றும் மாற்றுமதத்தினர் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகையை உடனடியாக திருக்கோவில் நிர்வாகம் வைக்க வேண்டும் என்றும், கோரிக்கை வைத்த நிலையில் மீண்டும் பதாகைகள் வைக்கபட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.