
சிவபெருமானுக்கு உகந்த எட்டு வகையான விரதங்களில் 'பிரதோஷம்' மிக முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை என இருமுறை திரயோதசி திதியில் மாலை நேரத்தில் வரும் இந்த வழிபாட்டை, "நித்ய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மகா பிரதோஷம்" எனப் பல வகைகளில் பிரிப்பார்கள். தினமும் மாலை 04.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தை பிரதோஷ வேளை என்றும், நித்ய பிரதோஷம் என்றும் சொல்லுவார்கள். சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி உலகைக் காத்த நேரமே பிரதோஷ காலம்.திங்கட்கிழமையில் வரும் சோமவார பிரதோஷம் மற்றும் சனிக்கிழமையில் வரும் சனி மகா பிரதோஷத்தை போல் ஒவ்வொரு கிழளையிலும் வரும் பிரதோஷத்திற்கு ஒரு தனிச்சிறப்பும், பலன்களும் உண்டு. அப்படி புதன்கிழமையில் வரும் பிரதோஷத்திற்கு என்ன சிறப்பு என தெரிந்து கொள்ளலாம்.
புத-பிரதோஷத்தின் தனித்துவமான சிறப்பு :
நவகிரகங்களில் 'புதன் பகவான்' கல்வி, அறிவு, வியாபாரம் மற்றும் பேச்சாற்றலுக்கு அதிபதி. ஜோதிட ரீதியாக புதன்கிழமை அன்று சிவனை வழிபடுவது ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் 'புதன் தோஷத்தை' நீக்கும் வல்லமை கொண்டது. பலரும் அறியாத தகவல் என்னவென்றால், பிரதோஷ வேளையில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவன் திருநடனம் ஆடும்போது, அங்கேயே திருமாலும் (புதனின் அதிதேவதை) உடன் இருந்து தாளம் இசைப்பதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே, புதன்கிழமை பிரதோஷத்தை வழிபடுபவர்களுக்கு சிவனின் அருளோடு விஷ்ணுவின் ஆசியும் ஒருசேர கிடைக்கிறது.
வழிபாட்டு முறைகள்:
- பிரதோஷ நேரத்தில் குளித்துவிட்டு, திருநீறு அணிந்து கோவிலுக்குச் செல்வது சிறப்பு. - சிவனை தரிசிப்பதற்கு முன்னால் நந்தியம் பெருமானின் அனுமதி பெற வேண்டும். "ஓம் நந்திகேஸ்வராய நமஹ" என்று கூறி, நந்தியின் கொம்புகளுக்கு இடையில் சிவதரிசனம் காண்பது கோடி புண்ணியம் தரும். - புதன்கிழமை பிரதோஷத்திற்கு 'பச்சை கற்பூரம்' அல்லது 'பன்னீர்' வாங்கித் தருவது சிறந்தது. இது புத பகவானின் ஆதிக்கத்தை வலுப்படுத்தி, மனக்குழப்பத்தை நீக்கி தெளிவான சிந்தனையைத் தரும். - இந்த நாளில் "ஓம் நம சிவாய" என்ற பஞ்சாட்சர மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்வது சிறப்பு. - சிவன் மற்றும் நந்திக்கு உரிய அபிஷேகம் மற்றும் பூஜை பொருட்களை வாங்கிக் கொடுப்பதால் நம்முடைய பாவங்கள் தீரும் என நம்பப்படுகிறது. - சிவனுக்கு பிரதோஷ வேளையில் வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், நந்திக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுவதும் சிறப்பு. - சிவபெருமானுக்கு பிரதோஷத்தன்று கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்வது கர்மவினைகளை குறைத்து, முக்தியை தரும் என்பது நம்பிக்கை. - பிரதோஷம் அன்று சிவபெருமானை வழிபடுவதுடன், நரசிம்ம பெருமாளையும் வழிபடுவதால் வாழ்க்கையில் எப்படிப்பட்ட துன்பத்தில் இருந்தும் விடுபட முடியும்.
செய்ய வேண்டிய 'ரகசிய' தானங்கள் :
இந்த நாளில் சிவனுக்கு வில்வ இலைகளையும், நந்திக்கு அருகம்புல்லையும் சமர்ப்பிப்பது வழக்கம். ஆனால், கூடுதல் பலன்களைப் பெற பச்சைப்பயறு தானம் சிறந்தது. புதனுக்கு உகந்த தானியம் பச்சைப்பயறு. இதனை வேக வைத்து பசுமாட்டிற்கு வழங்கினால், தடைப்பட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.
கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் பிரதோஷ வேளையில் கோவிலில் உள்ள தீபத்தில் 'இலவம் பஞ்சு' திரி போட்டு, சுத்தமான பசு நெய் ஊற்றி விளக்கேற்றினால் கடன் சுமை குறையும் என்பது நம்பிக்கை. புத-பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபட்டால் மாணவர்களுக்குக் கல்வியில் மந்த நிலை நீங்கி, ஞாபக சக்தி பெருகும். வியாபாரத்தில் நஷ்டத்தைச் சந்திப்பவர்கள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள். ஜாதகத்தில் புதன் பலவீனமாக இருப்பவர்களுக்கு பேச்சில் தடுமாற்றம் நீங்கி, சமயோசித புத்தி கூடும்.
வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருந்தாலும், பிரதோஷ காலத்தில் ஒரு நிமிடம் சிவனை நினைத்து தியானம் செய்வது மனதிற்கு அமைதியைத் தரும். "சிவ சிவ" என்று உச்சரித்து, இந்த புத-பிரதோஷத்தை மனதார வழிபடுங்கள்; அறிவுத்திறனும், செல்வ வளமும் தேடி வரும்.