இங்கே நந்தி இல்லை, பிரதோஷமும் இல்லை! புதுக்கோட்டை ஆவுடையார்கோயில் - சிவபெருமான் அருளும் விசித்திர கோலம்!

Published : Jan 19, 2026, 03:10 PM IST
Avudaiyarkoil Athmanathar Temple No Nandi No Pradosham Significance Tamil

சுருக்கம்

No Nandi No Pradosham Avudaiyarkoil Athmanathar Temple : திருப்பெருந்துறை என அழைக்கப்படும் ஆவுடையார்கோவிலின் சிறப்புகள் என்ன? இங்கு ஏன் பிரதோஷ வழிபாடு நடைபெறுவதில்லை? என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

No Nandi No Pradosham Avudaiyarkoil Athmanathar Temple : பொதுவாக சிவன் கோயில் என்றாலே அங்கு நந்தி இருக்கும். நந்தி இருந்தால் பிரதோஷம் நடக்கும். ஏனென்றால் சிவபெருமானின் வாகனமே நந்தி பகவான் தான். அப்படியிருக்கும் போது நந்தி பகவான் இல்லையென்றால் அந்த கோயிலில் பிரதோஷம் நடக்குமா என்று கேட்டால் நடக்காது. சிவபெருமானுக்கு பிரதோஷம் இல்லாத கோயில் ஏதேனும் இருக்கிறதா? என்றால் ஆம், இருக்கிறது. அதுவும் நம் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவிலில் தான் அப்படியொரு அற்புதமான சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலைப் பற்றிய வரலாறு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேலும் படிக்க மற்றொரு கோயில்: ஒரே இடத்தில் 8 பைரவர்கள்! சட்டைநாதர் கோயிலின் ரகசிய வழிபாடும் அற்புதப் பலன்களும்!

எங்கும் காணாத அற்புத கோயில்:

சிவபெருமான் திருக்கோவில்கள் என்றாலே இராஜ கோபுரம் அடுத்து பலிபீடம், நந்தி, கொடிமரம் காணப்படும். ஆனால் இந்த கோயிலில் அப்படி இல்லை. கோயில்களில் நடைபெறும் நால்பூசை, விழாக்களில் நாதசுரம், மேளம், பேரிகை, சுத்தமத்தளம் முதலிய வாத்தியங்கள் முழங்கப்படும். இத்தகைய வாத்திய ஒலிகளை இக்கோவிலில் கேட்க முடியாது. திருச்சின்னம், சங்கு, மணி முதலியவற்றின் ஒலிகளே கேட்கப்படும். சிவன் இத்தலத்தில் கருவறையில் மூலவர் அரூபமாகவும், அருவுருவமாக வடிவம் இல்லாத சதுர வடிவமாக காட்சியளிக்கின்றார். ஆலிவருக்கு ஆவுடையார் என்று பெயர் பெற்றது. இந்த கோவில் உருவாக காரணமாக இருந்த மாணிக்கவாசகர் உருவமாக அருளுகிறார். இங்கு குருந்தமரத்தையும் சிவனாகக் கருதுவதால், கார்த்திகை சோமவாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே, 108 சங்காபிஷேகம் நடக்கிறது. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறது. அதன்மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாகவும், ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதாலும் சுவாமிக்கு “ஆத்மநாதர்”என்று பெயர் ஏற்பட்டது. ஆறு கால பூஜையின்போதும், இவருக்கு 108 மூலிகைகள் கலந்த தைல முழுக்கு நடப்பது சிறப்பு.

மேலும் படிக்க: ஒரே இடத்தில் மூன்று சிவ வடிவங்கள்! பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர் - சீர்காழியின் ஆன்மீக ரகசியங்கள்!

தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத்தலத்தில் அரூப வடிவில் அதாவது உருவம் இல்லாத வடிவில் தவம் செய்தாள். எனவே, இந்தக் கோயிலில் அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது. இந்த பாதத்தைப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும். ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால், நவக்கிரகத் தூண்கள் வைக்கப் பட்டுள்ளன.

கோயில் வரலாறு:

மாணிக்க வாசகர் மதுரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்தவர். அரசன் உத்தரவுப்படி குதிரை வாங்க திருப்பெருந்துறைக்கு வந்தார். அப்போது சிவாகமங்கள் ஒலிக்கும் ஒலி கேட்கும் திசையில் சென்று பார்த்தால் ஞானகுருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார். மாணிக்கவாசகர் தன்னை ஏற்றுக்கொண்டு உபதேசம் அளிக்கும்படி வேண்டினார். குருவும் ஒப்புக்கொண்டார். உபதேசம் கேட்டு சிவநிட்டையிலிருந்து கலைந்த மாணிக்கவாசகர் குரு இல்லாதது கண்டு சிவபெருமான்தான் குருவாக வந்தது என்று தெரிந்து கொண்டார். உள்ளம் உருகிப் பாடினார். குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தில் கோயில் ஒன்றை கட்டி சிவதொண்டில் ஈடுபடலானார்.

கல்வியில் சிறக்க கொண்டாடப்படும் சியாமளா நவராத்திரி திருவிழா

பின்பு மன்னன் குதிரை வராத செய்தி கேட்டு மாணிக்கவாசகரைப் சிறையில் அடைத்தார். சிவபெருமான் நரிகளை பரிகளாக்கி அதாவது குதிரையாக்கி சிவபெருமானே ஓட்டிக் கொண்டு மதுரை வந்து மன்னனிடம் ஒப்படைத்தார். ஆனால் இரவிலேயே குதிரைகள் எல்லாம் நரிகளாக மாறியது. இதை கண்டு கோபம் கொண்டு மன்னன் மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தித் தண்டிக்க, வைகையில் வெள்ளம் வந்தது. கரையை அடைக்க சிவபெருமான் கூலியாளாக வந்து பிட்டு வாங்கி தின்று விட்டு வேலை செய்யாததால் பிரம்படி வாங்கினார். அந்த பிரம்படி அனைவரின் முதுகிலும் விழுந்தது, எனவே வந்தது இறைவன் என்று தெரிந்து கொண்ட பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரின் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டான். இந்த சிறப்பு மிக்க திருவிளையாடற்புராண கதை நிகழக் காரணமான தலம் தான் ஆவுடையார் கோவில் ஆகும்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ராமர் வழிபட்ட வட இராமேஸ்வரம்! சென்னையில் குரு பகவானின் அருளை அள்ளித்தரும் அற்புத தலம்!
வன போஜனம் என்றால் என்ன? கோயில்களில் ஏன் காடுகளுக்குச் சென்று உணவருந்தும் உற்சவம் நடக்கிறது?