திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கலிட்டு வழிபட்டால் அம்மாள் நம் வேண்டுதலை நிறைவேற்றுவாள் என்பது ஐதீகம்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. பெண்களின் சபரிமலை என வர்ணிக்கப்படும் இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் பொங்காலை விழா விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கில் பெண்கள் பங்கேற்று பொங்கல் இட்டு அம்மனை வழிபடுவார்கள்.
பொங்காலை விழா
மாசி மாதத்தில் 10 தினங்கள் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதன் 9ஆவது நாளில் தான் பொங்கல் வழிபாடு செய்யப்படும். இந்த ஆண்டின் பொங்கல் திருவிழா பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் பகவதி அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரசித்தி பெற்ற பொங்காலை வழிபாடு இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கப்பட்டது.
கோயில் வளாகத்தில் இருக்கும் பண்டார அடுப்பில் தீ மூட்டியதும், கோயிலை சுற்றியுள்ள கிட்டத்தட்ட ஆறு கி.மீக்கு அதிகமான சுற்றளவில் குவிந்துள்ள பெண்கள் பொங்கலிட தொடங்குவார்கள். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பொங்கல் பானைகளில் இருந்து நைவைத்தியம் தயார் செய்யப்படும். இதையடுத்து தாங்கள் வேண்டிக் கொண்டதை அம்மாள் நிறைவேற்றிக் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் பொங்கலிட்ட பெண்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.
இதையும் படிங்க: வீட்டில் தெய்வசிலை வழிபாடு செய்யலாமா? எப்படி வழிபட்டால் கடவுள் மனம் குளிர்ந்து.. அருளை அள்ளி கொடுப்பார்..!
பெண்களின் சபரிமலை
இந்த கோவிலில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். பகவதி அம்மனுக்கு பொங்கலை பிரசாதமாக படைக்கும் பெண்கள், பகவதி அம்மன் நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருவதாக நம்புகிறார்கள். இங்கு வழிபட்டால் அன்பு, மகிழ்ச்சி அனைத்தையும் அம்மாள் கொடுப்பாள் என்பது நம்பிக்கை.
இதையும் படிங்க: Holi 2023: ஹோலி அன்று தூவி விளையாடும் வண்ணங்களுக்கு இத்தனை சிறப்புகள் இருக்கா? இது வண்ணங்களின் திருவிழா..
புராண கதை
திருவனந்தபுரத்தில் வீற்றிருக்கும் பகவதி அம்மனை கற்புக்கரசி கண்ணகி என நம்புகிறார்கள். தன்னுடைய கணவன் திருடன் இல்லை என்பதை பாண்டிய மன்னனிடம் நிரூபித்து விட்டு, மதுரையை தீக்கிரையாக்கினாள் கண்ணகி. அதைத் தொடர்ந்து அங்கிருந்து குமரி வழியாக கேரள மாநிலத்தில் கொடுங்கல்லூர் எனும் இடத்திற்கு போகும் வழியில் ஆற்றுக்கால் எனும் பகுதியில் கண்ணகி இளைப்பாறினாள். அந்த இடத்தில் கண்ணகி நினைவாக எழுப்பட்டதே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் என்றும் சொல்லப்படுகிறது.