திருப்பங்கள் அளிக்கும் திருப்பூந்துருத்தி திருத்தலம்..

By Dinesh TG  |  First Published Oct 14, 2022, 11:13 PM IST

பித்ரு சாபங்களால் அவரவர் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். அதனை சரி செய்ய அனைத்து கோவில்களுக்கும் ஏறி இறங்குவார்கள். அப்படிப்பட்ட பித்ரு சாபங்களை நீக்கும் திருத்தலங்களில் முக்கியமான தலமாக  திருப்பூந்துருத்தி திருத்தலம் அமைந்துள்ளது. 


மனிதர்கள் தங்களது வாழ்வில் இன்பங்களையும், பேறுகளையும் அடைய விடாமல் தடுத்து நிறுத்துவதில் முக்கிய பங்கு முன்னோர்கள் சாபம் எனப்படும் பித்ரு சாபம் தான். இந்த பித்ரு சாபங்களால் அவரவர் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். அதனை சரி செய்ய அனைத்து கோவில்களுக்கும் ஏறி இறங்குவார்கள். அப்படிப்பட்ட பித்ரு சாபங்களை நீக்கும் திருத்தலங்களில் முக்கியமான தலமாக  திருப்பூந்துருத்தி திருத்தலம் அமைந்துள்ளது. அதோடு சிவாலயங்களிலே இதுதான் சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. 

திருவையாறு செல்லும் வழியில் உள்ள கண்டியூரின் கிளை பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. பயணம் மேற்கொண்டால் திருப்பூந்துருத்தி தலத்தை அடையலாம். இந்த பிரம்மாண்டமான ஆலயத்தில், ஏகப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் அனைவரையும் பிரமிக்க வைக்கின்றன. இங்கு இறைவன் புஷ்பவனேஸ்வரர் என்ற திருநாமத்துடனும், சவுந்தரிய நாயகி என்ற திருநாமத்துடன் இறைவியும் அருள்பாலிக்கிறார்.பெயருக்கு ஏற்றாற்போல், அழகுடனும் கனிவுடனும் கருணைப்பார்வையுமாக ஜொலிக்கிறாள் அம்பிகை. 

Latest Videos

undefined

தேவாரத்தில் நாவுக்கரசர் பாடிய திருத்தலம் இதுதான். இந்த ஊருக்கு 'துருத்தி' என்ற பெயர் உண்டு. காரணம் இரண்டு ஆறுகளுக்கு நடுவில் துருத்திக் கொண்டிருப்பதால் இப்பெயர் வந்தது என்று கூறப்படுகிறது. அதோடு இறைவனின் திருநாமம் புஷ்பவனேஸ்வரர் என்பதால் திருப்பூந்துருத்தி என்று ஆனதாகவும் ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.

திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருநெய்த்தானம், திருப்பூந்துருத்தி என சப்த ஸ்தான ஸ்தலங்களில் இந்தத் தலமும் ஒன்று என்றாலும் இந்த தலத்தை தான் சப்த ஸ்தான ஸ்தலங்களின் மூல தலம் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் வரும்  சித்ரா பெளர்ணமி என்பது சிறப்பு பெற்றது. அன்றைய தினம் சப்த ஸ்தானத் திருவிழா வெகு விமர்சையாக இங்கு நடைபெறும். இதை ஏழூர்த்திருவிழா என்றும் கூறுவார்கள்.

இந்தத் தலத்தில் திருநாவுக்கரசர் தங்கி இறைவனை வழிபட்டு வந்தார். இதை தெரிந்து கொண்ட ஞானசம்பந்தர், மதுரையில் இருந்து நேரடியாக சோழ தேசத்துக்கு, பல்லக்கில் திருப்பூந்துருத்தி கோயிலுக்கு வந்தவர். அங்கிருந்து “நான் நாவுக்கரசப் பெருமானை தரிசிக்க வந்துள்ளேன். அவர் எங்கே இருக்கிறார்?” என கேட்க, “இதோ.. நான் இங்கு இருக்கிறேன்” என்றார் நாவுக்கரசர். என்ன குரல் நமது அருகில் இருந்து கேட்கிறது என்று.. ஞானசம்பந்தர் பல்லக்கில் இருந்து வெளியே எட்டி பார்க்க.. பல்லக்கைத் தூக்கியபடி நின்றவர்களில் ஒருவராய் நின்றிருந்தாராம். உடனே அதிர்ந்து போய் பல்லக்கில் இருந்து இறங்கி விட்டாராம்.

Deepavali : தீபாவளி கொண்டாட இத்தனை காரணங்களா?

பின்னர் அப்பர் பெருமான் மடமொன்று தொடங்கி, தொண்டுகள் பலவும் செய்து வந்தார். அந்த மடம் இன்றைக்கும் அங்கு இருக்கிறது. அதேபோன்று, சம்பந்தர் பெருமான் கோயிலுக்குள் உள்ளே நுழையும் போதே சிவ தரிசனம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நந்தி தேவர் சற்றே விலகி நின்று கொண்டாராம். அந்த நந்தி இன்றளவிலும் சந்நிதிக்கு எதிரே சற்று தள்ளியே இருக்கின்றது. அதேபோன்று, இந்தத் தலத்தில் வீணையுடன் அற்புதமாகக் காட்சி தருகிறார் வீணாதர தட்சிணாமூர்த்தி. கலைத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் எனும் ஆர்வமும் லட்சியமும் கொண்டவர்கள் திருவையாறு தலத்துக்கு வருவது வழக்கம். அப்போது அப்படியே திருப்பூந்துருத்தி தலத்துக்கும் வந்து தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

Lashmi Kataksam : லஷ்மி கடாட்சம் தங்க இதை செய்யுங்கள்!!

பிரதோஷ நன்னாளிலும்,மாத சிவராத்திரியில் அல்லது மகா சிவராத்திரியிலும், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையிலும் திருப்பூந்துருத்தி திருத்தலத்துக்கு வந்து தரிசிக்க வேண்டும் என்கிறார்கள். திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரரை வாழ்வில் ஒரு முறையேனும்  கண்ணாரத் தரிசித்து விட்டால், இந்த ஜென்மத்தின் எல்லாப் பாவங்களும் நீங்கி விடும் என்பது ஐதீகம். அதேபோல், அமாவாசை நாளில், திருப்பூந்துருத்தி தலத்துக்கு வந்து சிவனாரையும் உமையவளையும் தரிசித்துப் பிரார்த்தித்தால், பித்ருக்களின் ஆசி நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி என்கிறார்கள்.

click me!