சென்னைக்கு வெளியில் வீடு வாங்குபவர்கள் இந்த விஷயங்களை கட்டாயம் கவனிக்கணும்…

First Published Oct 9, 2017, 1:31 PM IST
Highlights
Outside of Chennai home buyers are obliged to look at these things ..


சென்னை நகரத்தின் அதிவேக வளர்ச்சியால் வீடுகளுக்கான தேவை அதிகரித்தபடியே இருக்கிறது. இதனால் சென்னை நகரத்தின் மையப் பகுதிகள் மட்டுமன்றி புறநகர் பகுதிகளும் குடியிருப்பாக மாறி வருகின்றன.

சென்னைக்கு மிக அருகில் என்று சென்னைக்கு வெளிப் பகுதிகளில் வீடு வாங்குபவர்கள் இந்த விஷயங்களை கட்டாயம் கவனிக்கணும்.

எந்த பகுதியில் வீடு வாங்குகிறோமோ அங்கு மென்மேலும் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்று பார்க்க வேண்டும். வருங்காலத்தில் மேலும் வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றால் நிலத்தின் மதிப்பும் உயரும்.

ஒரு புறநகர்ப் பகுதி வளர்ச்சி பெற வேண்டும் என்றால் அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் நன்றாக இருக்கவேண்டும். மேம்பாலங்கள், இணைப்புச் சாலைகள் ஆகியவை இருக்கவேண்டும்.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் இருக்கவேண்டும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் வீடு வாங்குவதற்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஆகியவை அருகில் இருப்பதும் நல்லது.

முக்கியமாக வீடு வாங்கும் பகுதி சி.எம்.டி.ஏ அமைப்பினால் குடியிருப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி அறிவிக்கப்பட்டிருந்தால் வருங்காலத்திலும் அது குடியிருப்பு பகுதியாகவே இருக்கும்.

அங்கு தொழிற்சாலைகள் கட்டுவதற்கு அனுமதிக்கமாட்டார்கள். எனவே முதலீட்டுக்கு உறுதியான பாதுகாப்பு கிடைக்கும்.

வீடு வாங்கும் பகுதியில் குடிநீர் வசதிகள் நன்றாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள வேண்டும். தற்போது கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. இந்த திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். இதனால் எதிர்காலத்திலும் குடிநீர் பிரச்சினைகள் வராமல் தவிர்க்கமுடியும்.

முக்கிய சாலைகளை ஒட்டி அமைந்திருக்கிற புறநகர் பகுதிகள் வளர்ச்சியடைவதற்கு என்ன காரணம்?

முக்கியமான சாலைகளில் இணைப்பு சாலைகள் சந்திக்கிற பகுதிகளில் வளர்ச்சி நன்றாக இருக்கும். உதாரணத்திற்கு திருவான்மியூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் பெருங்குடி, அங்கிருந்து 2 கிலோமீட்டரில் துரைப்பாக்கம், அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் பெரும்பாக்கம் என்று அருகருகே உள்ள புறநகர்ப்பகுதிகள் விரைவான வளர்ச்சியை அடைந்துவருகின்றன. இந்த வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். முக்கியமாக, அந்தப் பகுதியின் அருகில் அமைந்துள்ள எல்காட் முதலான சிறப்பு பொருளாதார மண்டலங்கள். இங்கு பணியாற்றுவதற்காக நிறைய ஊழியர்கள் வருகிறார்கள். அவர்களுக்கான குடியிருப்பு வசதிகள் உருவாகும்போது இயல்பாகவே அந்த பகுதி வளர்ச்சியடைகிறது.

மேலும் அங்கிருந்து இணைப்பு சாலைகளின் வழியாக அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையை எளிதில் அடையமுடியும். இதனால் தியேட்டர், மால், ஹோட்டல் என்று நவீன வாழ்க்கை அம்சங்கள் பலவற்றையும் அனுபவிக்க முடிகிறது. இப்படி பல விஷயங்கள் சேர்ந்துதான் முக்கிய சாலைகளையொட்டி வளர்ச்சி ஏற்படுகிறது.

ஒரு புறநகர்ப்பகுதி நகரத்தின் அருகாமை பகுதியாக மட்டும் இருப்பதில்லை. அது பக்கத்தில் இருக்கிற கிராமங்களை நகரத்தோடு இணைக்கிற தொடர்பு புள்ளியாகவும் இருக்கிறது.

எனவே அங்கு நகரத்தின் அனைத்து வசதிகளும் அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு பெரும்பாக்கத்தையே எடுத்துக்கொள்வோம். அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுசேரிக்கும் சென்னைக்கும் பெரும்பாக்கம்தான் பாலமாக இருக்கிறது.

வீடு வாங்குபவர்களின் விருப்பங்கள் எப்படி இருக்கின்றன?

ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை தற்போது வீடு வாங்குபவர்களின் சந்தையாகத்தான் இருக்கிறது. முன்பு இருந்ததைப் போல பில்டர்களின் சந்தையாக இல்லை.

ஒரு பகுதியில் வீடு வாங்க விரும்புபவர் அந்த பகுதியில் விற்பனைக்கு இருக்கும் எல்லா வீடுகளையுமே பார்த்து திருப்தி ஏற்பட்ட பிறகுதான் வீடு வாங்குகிறார். எனவே இப்போது வீடு வாங்குபவர்களின் விருப்பங்களை முழுமையாக நிறைவு செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வீட்டை பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து ஓராண்டு காலம் வரையிலும் வீட்டில் ஏற்படும் பழுதுகளை பில்டர்களே சரிசெய்து கொடுக்க வேண்டும் என்ற உடன்பாடு நடைமுறையில் இருக்கிறது. இருந்தாலும் மேலும் சில ஆண்டுகளுக்கு இந்த உத்தரவாதத்தை வீடு வாங்கு
பவர்கள் விரும்புகிறார்கள்.

வீடு வாங்குபவர்கள், அந்த வீட்டை கட்டிய பில்டர் அதற்கு முன் கட்டி முடித்த வீடுகளையும் பார்த்தபிறகே முடிவுக்கு வருகிறார்கள். எனவே வீட்டை ஒப்படைப்பதோடு பில்டரின் வேலை முடிவதில்லை. அந்த வீட்டை நல்ல நிலையில் தொடர்ந்து பராமரிக்கவேண்டிய வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கிறது.

புறநகர் பகுதிகளில் வீடுகளின் விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? 

ரியல் எஸ்டேட் துறையில் அவ்வப்போது சில தேக்க நிலைகள் உண்டாவது இயல்பு. அதனால் வீடு அல்லது வீட்டு மனைகளின் விலை ஏறாமல் இருக்கலாம். அதை பார்த்து விலை குறையட்டும், வாங்கிக் கொள்ளலாம் என்று காத்திருப்பது தவறானதாகும்.

ஏனென்றால் புறநகர்ப் பகுதியில் நிலத்தின் விலை குறைவதற்கு ஒருபோதும் வாய்ப்பே இல்லை. எனவே விலை குறைவாக இருக்கும்போதே வீடு வாங்குவதுதான் சரியானது. புறநகர்ப்பகுதியில் வீடு வாங்க இதுதான் சரியான நேரம்.

click me!