வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் உற்சாக மனநிலையை ஏற்படுத்தும் செயற்கை புல்தரைகள்…

First Published Oct 2, 2017, 1:30 PM IST
Highlights
Artificial grasses that cause enthusiasm in the home and outside of the home ...


கான்கிரீட் கட்டிடங்களுக்குள் பணிபுரிந்து விட்டு, போக்குவரத்து நெரிசல்கள் மிகுந்த தார் ரோடுகளில் பயணம் செய்து, சலிப்புடன் வீடு வந்து சேர்வது நகரத்தின்  அன்றாட அனுபவமாக இருக்கிறது.

வீட்டுக்குள் வந்தவுடன் பசுமையான செடிகொடிகள் கண்ணில் படும்போது மனம் அடையும் மகிழ்ச்சியை சொல்லுக்குள் அடக்க  இயலாது. அதுவும் வீட்டில் ‘மெத்தென்ற’ புல்தரை கொண்ட தோட்டமும் இருந்துவிட்டால் மாலை நேரங்களை அங்கு கழிக்கவே எல்லோரும் விரும்புவார்கள். சிறியவர்  முதல் பெரியவர் வரை எல்லோரும் புல்தரையில் விளையாடி மகிழ்வார்கள்.

புல்தரை என்றவுடன் நமக்கு ஞாபகம் வருவது பூங்காக்களில் இருக்கும் பச்சை புற்கள் நிறைந்த தரைதான். புல்தரையில் விளையாடி மகிழ்வதற்கு அருகிலுள்ள பூங்காவுக்குத்தான் செல்ல வேண்டும் என்பது இப்போது இல்லை.

வீட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் செயற்கை புல்தரைகள் அமைத்து கொள்ளும் தொழில்நுட்பங்கள் இப்போது வந்து விட்டன. செயற்கையான புல்தரைகளை அமைக்க உதவும் தகவல்களை இங்கு காணலாம்.

‘பாலிபுரோபைலின்’ என்ற பிளாஸ்டிக் வகையை சேர்ந்த பரப்பின் மீது அமைக்கப்பட்ட சிறுசிறு துளைகளில் ‘சிலிகான் கோட்டிங்’ செய்யப்பட்ட செயற்கை இழைகளால் பின்னப்படும் அமைப்பு இதுவாகும். அதற்குள் ‘ரப்பர்’ துகள்கள் பரவலாக நிரப்பப்பட்டிருக்கும்.

‘ரப்பர்’ இழைகள் சம அளவு உயரத்தில் வெட்டப்பட்டு சமமாகவும், நல்ல பசுமையான நிறத்தில் இருப்பது போன்றும் தயார் செய்யப்படும். சதுரமான பெரிய அளவு ‘டைல்ஸ்’ போன்ற பல அளவுகளில் தயாராகி விற்பனைக்கு வருகின்றன.

உயிர்த்தன்மையுள்ள புல்வெளிகளில் நிறைய பராமரிப்புகள் செய்ய வேண்டியதாக இருக்கும். தினமும் தண்ணீர் விடவேண்டும். அதிகமாக வளர்ந்த இடங்களை வெட்டியாக வேண்டும்.

கடும் வெயில் காலங்களில் வாடி விடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். மேலும் சீரான ஒரே நிறம் அதில் இல்லாமல் பச்சை நிறத்தில் பல்வேறு விதங்கள் காணப்படும்.

செயற்கை புல்தரை அமைப்பில் மேற்கண்ட எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது. தண்ணீர் விட்டு பராமரிக்கும் அவசியம் இல்லை. ஆரம்பத்தில் இருக்கும் பச்சை நிறமே வருடக்கணக்காக இருக்கும்.

சுத்தம் செய்வதற்கும் மிகவும் எளிதானது. ‘பிளாஸ்டிக்கால்’ செய்யப்பட்ட ‘பிரஷ்கள்’ இவற்றை சுத்தம் செய்வதற்காக இருக்கின்றன. தண்ணீரை மேலாக பீச்சியடித்துவிட்டு ‘பிரஷ்’ கொண்டு துடைத்தால் சுத்தமாகிவிடும்.

மேல் மாடியில் தோட்டம் அமைப்பது அருமையான விஷயம் என்றாலும் அதன்
பராமரிப்புகளை எந்த அளவில் கவனிக்கிறோம் என்பது முக்கியமாகும்.

செயற்கை புல்தரை அமைக்கும்போது அழகுக்கு அழகாகவும் பசுமையாகவும் இருக்கும். வெயில் மற்றும் மழை காலங்களில் அவற்றில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதன்மீது நடந்தாலும் எவ்வித பாதிப்பும் அடைவதில்லை.

பால்கனிகளில் இவ்வகை புல்தரைகளை அமைத்துக்கொள்வது புதுமையான முயற்சியாக இருக்கும். தண்ணீர் தேவைப்படாத புல்தரையாக இருப்பதாலும், எளிமையான செயற்கை வடிவத்தில் இருப்பதாலும் பால்கனிகளிலும் அமைத்து வீட்டுக்குள் பசுமையான சூழலை கொண்டு வரலாம்.

‘லான்’ என்று சொல்லப்படும் தோட்ட நடைபாதைகளில் பராமரிப்புகள் அதிகமாக இல்லாத புல்தரையாக இதை அமைத்துக் கொள்ளலாம். வீடுகளுக்குள் உடற்பயிற்சி செய்யும் இடத்தில் அமைத்து கொண்டால் தரையில் அமர்ந்து செய்யும் பயிற்சிகளுக்கு வசதியாக இருக்கும். பூச்சிகள் இவற்றில் தங்குவது கிடையாது என்பதால் வீடுகளுக்குள் தேவைப்பட்ட இடத்தில் அமைப்பது எளிதாக இருக்கும்.

click me!