வாழ்வின் நல்ல தருணங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த உங்கள் வீட்டை புகைப்படங்களால் அலங்கரிக்கலாம்…

 
Published : Oct 02, 2017, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
வாழ்வின் நல்ல தருணங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த உங்கள் வீட்டை புகைப்படங்களால் அலங்கரிக்கலாம்…

சுருக்கம்

You can decorate your home with photos to remind you of the good moments of life ...

வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் புகைப்படங்களால் அலங்கரிக்கலாம். வாழ்வின் முக்கிய தருணங்களை நினைவுபடுத்தும் படங்களோடு நமக்கு பிடித்தமான மனிதர்கள், விலங்குகள், பூக்கள், இயற்கைக் காட்சிகள் என்று எந்தவிதமான புகைப்படங்களைக் கொண்டும் அலங்காரம் செய்யலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களை சுவர்களில் பொருத்தும்போது அவற்றை நீளம், அகலம் ஆகிய அளவுக்கு ஏற்றபடி அமைக்க வேண்டும். அது பார்ப்பதற்கு மேலும் அழகைக் கொடுக்கும்.

உதாரணத்திற்கு வெவ்வெறு அளவுகளில் உள்ள மூன்று படங்களை சிறியது, அதைவிட கொஞ்சம் பெரியது, அதைவிட பெரியது என்ற வரிசையில் அமைத்தால் நன்றாக இருக்கும்.

அதையே கிடைமட்டமாக இல்லாமல் மேலிருந்து சாய்வாக கீழ்நோக்கி அமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும். அதைப்போல நான்கு சிறிய புகைப்படங்களுக்கு நடுவில் பெரிய அளவிலான படத்தை மையத்தில் வைத்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

புகைப்படத்தின் நிறம், வெளிச்சம், கோணம் ஆகியவை போலவே அதற்குப் பொருத்தப்படுகிற பிரேம் முக்கியமானது. முன்பு மரச்சட்டங்களால் மட்டுமே பிரேம்கள் செய்யப்பட்டன. தற்போது நுணுக்கமான வடிவமைப்புகளைக் கொண்ட உலோகச் சட்டங்களும் கிடைக்கின்றன. புகைப்படத்திற்கு ஏற்ற பிரேமை தேர்வு செய்வது முக்கியமானதாகும்.

புகைப்படங்களுக்கு பாரம்பரியமான தோற்றத்தை அளிக்க வேண்டும் என்றால் மரச்சட்டங்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. இயற்கையோடு இசைந்து வாழ விரும்பும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஏற்றவிதத்தில் ‘அக்ரலிக்’ முதலியவற்றால் ஆன பிரேம்களும் தற்போது கிடைக்கின்றன.

சதுரம், செவ்வகம், நீள்வட்டம் ஆகிய வடிவங்களில் ரெடிமேடாகவும் போட்டோ பிரேம்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதய வடிவத்திலும்கூட இந்த பிரேம்கள் கிடைக்கின்றன. நமது தேவைக்கேற்றபடி இந்த மாதிரியான ரெடிமேட் பிரேம்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

புகைப்படங்களை பொருத்தும்போது அவற்றின்மீது விழுகின்ற வெளிச்சமும் சரியான அளவில் இருக்கவேண்டும். புகைப்படத்தில் அதிகமான வெளிச்சம் விழுந்து பிரதிபலித்தால் அது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.

கண்டிப்பாக புகைப்படங்களை பார்வை மட்டத்திலேயே பொருத்த வேண்டும். அண்ணாந்து அல்லது குனிந்து பார்க்கும் மாதிரி அமைப்பது அழகுணர்ச்சியை அளிப்பதில்லை.

புகைப்படங்கள் வெறும் அலங்கார அம்சம் மட்டுமில்லை. அவை வாழ்வின் உற்சாகமான தருணங்களை மீண்டும், மீண்டும் நினைவுபடுத்தி மனதை புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ளவும் உதவுகின்றன

PREV
click me!