மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க உங்கள் ஆலோசனை தேவை.. எடப்பாடியிடம் உருகிய ஸ்டாலின்..

By Ezhilarasan BabuFirst Published May 3, 2021, 11:48 AM IST
Highlights

அதை வரவேற்றுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின். எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

தனக்கு வாழ்த்துக் கூறிய எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை என வலியுறுத்தியுள்ளார்.  இது அதிமுக-திமுக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்றது.  234 தொகுதிகளிலும் நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. அதில் ஆரம்பம் முதல் இருந்தே திமுக கூட்டசி முன்னணியில் இருந்து வந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு இறுதியில் சுமார் 159 தொகுதிகளை கைப்பற்றி திமுக கூட்டணி தேர்தலில் வெற்றி கண்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்து திமுக, ஆளுங்கட்சியாக மாறியுள்ளது. துணை முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர் என பல பதவிகளை வகித்த திமுக தலைவர் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் அவருக்கு பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். அதேபோல் வலுவான எதிர்க் கட்சியாக அதிமுக அமைந்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில்  முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துக் கூறியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள திரு மு.க ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். அதே போல எடப்பாடி பழனிச்சாமி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதை வரவேற்றுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின். எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்! என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அதிமுக, திமுக தேர்தல் களத்தில் எலியும், பூனையுமாக பகைமை பாராட்டினாலும் மக்கள் நலன் என்று வரும்போது ஜனநாயக ரீதியான ஒத்துழைப்பும், தேவையான நேரத்தில் ஆலோசணை தரும் எதிர்கட்சியாகவும், அதை கணிவுடன் கேட்டு பரிசீலிக்கும் ஆளுங்கட்சியாக்கவும் செயல்பட்டால் மட்டுமே வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்பதில் இரு திராவிட கட்சிகளுமே தெளிவாக இருப்பதை இது காட்டுவதாக இரு கட்சி தொண்டர்களும் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். 
 

click me!