கோரிக்கை மனுவுடன் 2 சவரன் தங்க சங்கிலி.. முதலமைச்சர் ஸ்டாலினை நெகிழவைத்த இளம் பட்டதாரி..

By Ezhilarasan BabuFirst Published Jun 14, 2021, 11:14 AM IST
Highlights

தங்கச் சங்கிலி வழங்கிய பொன் மகனுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்

.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மேட்டூர் அணையை திறக்க சென்றபோது இளம்பெண் ஒருவர் தனக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என வைத்த கோரிக்கை மனுவுடன் சேர்த்து, முதலமைச்சரின் கொரோனா நிவாரண உதவியாக தன்னிடத்தில் இருந்த 2 சவரன் தங்கச் சங்கிலியை கொடுத்துள்ள சம்பவம் முதலமைச்சர் ஸ்டாலினை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அந்த பெண் கொடுத்த கோரிக்கை மனுவுடன் அந்த தங்க சங்கிலியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனக்கு நெகிழ்ச்சி ஏற்படுத்திய பொன் மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் பதிவிட்டுள்ளார். 

கடந்த 12 ஆம் தேதி (சனிக்கிழமை)  தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மேட்டூர் அணையைத் திறக்க பயணம் மேற்கொண்டார், அப்போது சௌமியா என்ற இளம்பெண் அவரிணம் கோரிக்கை மனு ஒன்று அளித்தார். அதில் தான் பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான எனவும், தனது தந்தை ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும், தன்னுடன் பிறந்த இரண்டு மூத்த சகோதரிகளுக்கு திருமணம் நடந்து விட்டது, தனது தந்தை சம்பாதித்த அனைத்து பணத்தையும் தங்களின் படிப்பு செலவுக்கு செலவழித்து விட்டதாகவும், மூன்று பெண்களும் பட்டதாரிகள், ஆனால் யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும், தனது தந்தை ஓய்வு பெற்ற சில மாதங்களில் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாகவும், அதைத் தொடர்ந்து தனது தாயாரும் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்தார் எனவும் கூறியுள்ளார்.  

மேலம், தனது தந்தை சேர்த்துவைத்த மொத்தம் 13 லட்சம் பணத்தை தனது தாயாரின் மருத்துவச்  சிகிச்சைக்கு செலவு செய்து விட்டதாகவும், தற்போது வரை சொந்த வீடுகூட இல்லாமல் மாத ஓய்வூதியம் 7 ஆயிரம் ரூபாயில் மூன்றாயிரம் வீட்டுக்கு வாடகை செலுத்திவிட்டு, நான்காயிரம் ரூபாய் வைத்துக் குடும்பம் நடத்தி வறுமையில் வாழ்ந்து வருவதாகவும், எனவே தனக்கு ஒரு வேலைவாய்ப்பை, அதாவது அரசு வேலை இல்லாவிட்டாலும், ஒரு தனியார் நிறுவனத்திலாவது வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக, தனது கடிதத்தில் அந்த பெண் குறிப்பிட்டிருந்தார். மேலும் தற்போது  தன்னிடம் பணம் இல்லாததால் கொரோனா உதவித்தொகையாக தனது இரண்டு சவரன் தங்க சங்கிலியை நிதியாக கொடுப்பதாகவும் அவர் தனது கோரிக்கை மனுவுடன் முதல்வரிடம் வழங்கியுள்ளார். 

அந்தக் கடிதத்தை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அதை வாங்கி பிரித்து படித்த போது அதில் இரண்டு சவரன் தங்கச் சங்கிலி இருந்ததைக் கண்டும், அது தொடர்பாக அந்த பட்டதாரி மாணவி எழுதிய கடிதம் குறித்தும் படித்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம்பெண் வழங்கிய தங்கச்சங்கிலியுடன் அந்த கடிதத்தையும், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸடாலின், மேட்டூர் அணையை திறக்க சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடை உள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சை நெகிழ வைக்கிறது. தங்கச் சங்கிலி வழங்கிய பொன் மகனுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

அரசு வேலையை எதிர்பார்க்கவில்லை, தனியாரில் கிடைத்தால் கூட போதும் என்பதிலிருந்து அந்த பெண் உண்மையை பேசுகிறார் என்பது உறுதியாகிறது, இந்தச் சூழலிலும் அரசுக்கு உதவ இரண்டு பவுன் தங்க நகை கொடுத்துள்ளார் என்பது மெய்சிலிர்க்க வைக்கிறது, முதலமைச்சர் ஸ்டாலின் நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு உதவ வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. இன்னும் சிலர் அந்த பெண்ணை அழைத்து நிச்சயம் முதல்வர் பணி வழங்குவார் என எதிர்பார்க்கிறோம் என பதிவிட்டு வருகின்றனர். 
 

click me!