
சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து திமுகவுக்கு எதிராக பேசியும், பதிவிட்டும் வந்த யூடியூபர் கிஷோர் கே சாமியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ஐ.டி பிரிவு சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாஜக ஆதரவாளராக கருதப்படும் கிஷோர் கே சுவாமி தொடர்ந்து திமுகவுக்கு எதிராக சமூக வலைதளத்தில் செயல்பட்டு வருகிறார். முன்னாள் முதல்வர்கள், அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் குறித்து அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும், அவதூறு கருத்துக்களையும் பகிர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இவர் மீது பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து பதிவு செய்ததாகவும் வழக்கு நிலுவையில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுக ஆட்சியின்போது இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளிவந்த இவர், தொடர்ந்து திமுக தலைவர்கள் குறித்து இழிவாக கருத்து பதிவிட்டு வருகிறார். @sansbarrier என்ற டுவிட்டர் கணக்கு மூலமாக இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வடக்கு திமுக ஐ. டி பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று காலை கிஷோர் கே சாமியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவசாமி காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அதனையடுத்து தாம்பரம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கிஷோர் கே சாமி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதாவது கலகம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் மீது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.