
சமகால அறிவியலுக்கு சவால் விடும் வகையில் செம ஹைடெக்காக இருக்கும் கமல்ஹாசனின் படங்கள். சாட்டிலைட், சுனாமி, கேயஸ் தியரி...என்று தமிழன் கேள்விப்பட்டிருக்காத விஷயங்களை ஜஸ்ட் லை தட் ஆக தனது படங்களில் டீல் செய்து கொண்டிருப்பார் கமல்.
ஆனால் அதே வேளையில் ரஜினியின் படங்களோ பொதுவாக பெரியளவின் முன்னோக்கு சிந்தனைகளுடன் இல்லாமல் கடந்த 10 வருடங்களுக்குள் தமிழன் கண்ட வஸ்துக்களோடுதான் டீல் செய்து கொண்டிருக்கும். ஷங்கரின் இயக்கத்தில் அவர் நடித்த ‘எந்திரன், 2.0’ மட்டுமே விதிவிலக்கு எனலாம்.
சினிமாவில் எப்படி அட்வான்ஸ்டோ அதே போலத்தான் அரசியலிலும் ஹைடெக்காக கலக்க துவங்கியுள்ளார் கமல்ஹாசன். புதிய ‘ஆப்’களை அறிமுகம் செய்வது, இணையம் வழியே உறுப்பினர்களுடன் இணைவது என்று மனிதர் வழக்கம்போல் வரிசை வைத்து வருகிறார்.
இந்த நிலையில் அரசியலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகளை துவங்கியுள்ள ரஜினியும் ஹைடெக்தனங்களை புகுத்த நினைத்தார். இதற்காக உறுப்பினர் சேர்க்கைக்காக ஒரு பிரத்யேக ‘ஆப்’ ஒன்றை வடிவமைத்து பயன்படுத்த துவங்கியது ரஜினியின் டீம். ஆனால் அது சொதப்பிவிட்டது! என்கிறார்கள்.
இதுவரையில் அப்டேட் செய்யப்பட்ட விஷயங்களில் ஏகப்பட்ட குளறுபடிகளாகி, கஷ்டப்பட்டு உழைச்சதெல்லாம் கண் முன்னே கந்தலாகிப் போய்விட்டதாம். இதை கண்டு ரஜினி செம அப்செட்! என்கிறார்கள்.
இதற்கு என்ன மாற்று? என்று ரஜினி தன் நண்பர்களை கேட்டபோது ‘நண்பா உனக்கு இந்த ‘ஆப், அப்ளிகேஷனெல்லாம் சரிப்பட்டு வராது. பேசாம சிவகாசியில பல்க் ஆர்டர் கொடுத்து உறுப்பினர் படிவத்தை பிரிண்ட் பண்ணி அனுப்பு. ஜனரஞ்சகமா செயல்பட்டால்தான் உன்னோட நடவடிக்கை செம ஹிட்டடிக்கும்.’ என்று அவரது பட ஸ்டைலை ரெஃபர் செய்து பேசியிருக்கிறார்கள்.
அதையே ஃபாலோ செய்ய துவங்கியிருக்கிறார் ரஜினி. கட்டுக்கட்டாக விண்ணப்பம் அடித்து ஏரியா முழுக்க சும்மா யூரியா தூவியது போல் விநியோகிக்க துவங்கியுள்ளனர் அவரது மன்றத்தினர்.
அதானே! ரஜினிகாந்த் சந்தையில நின்னு கலர் கலரா டிரெஸ் போடுக்கிட்டு கம்பு சுத்துனால்தானே கைதட்டல் விழும்.