
சிவன் - பார்வதியை சுற்றிவிட்டு ‘உலகத்தை சுற்றினேன்’ என்று சொல்லி டபாய்த்து மாம்பழத்தை வாங்கினார் பிள்ளையார். கிட்டத்தட்ட இதே ஸ்டைலில் அறிவாலயத்தில் அமர்ந்தபடி ‘கள ஆய்வு’ என்று சொல்லி அத்தனை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளையும் வரச்சொல்லி பஞ்சாயத்து நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
கள ஆய்வுக்கு வரும் கட்சியினர் ’தளபதி அன்னைக்கு எங்க மாவட்ட செயலாளர் என்னை பார்த்து முறைச்சாரு!’ என்பதில் ஆரம்பித்து ‘பதவி தர்றேன்னு பத்து லட்சம் வாங்கிட்டு பல்பு கொடுத்துட்டார்.’ என்பது வரைக்கும் சகலவிதமான புகார்களையும் எழுதிப்போட ‘தீர்வு காணும் பெட்டி’ எனும் தலைப்பில் ஒரு பொட்டியையும் வைத்திருக்கிறார்.
இந்த பெட்டியில் விழும் புகார்கள் வாசிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விசாரணையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்! என்று ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை நம்பி கழகத்தின் கீழ் நிலை நிர்வாகிகள் எக்ஸ்ரா பேப்பரெல்லாம் வாங்கி, வரிந்து வரிந்து புகார் எழுதி, புகார் பெட்டியின் தொண்டைக்குழி வரைக்கும் மனுக்களை கொட்டி தெறிக்க விடுகிறார்கள்.
ஆனால் இந்த அதிரடி நடவடிக்கைகள் மீது மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அச்சமே இல்லாமல் இருந்தது. காரணம் ‘தளபது சொல்லுவாப்ல! ஆனா கண்டுக்க மாட்டாப்ல. சும்மா லுலுலுங்காட்டிக்குதான் இந்த புகார் பெட்டியெல்லாம்.’ என்று நினைத்தனர்.
ஆனால் அவர்களின் நினைப்பில் ரெண்டு லோடு மண்ணை தட்டியிருக்கிறார் ஸ்டாலின். ஆமாங்க! புகார் மனுவில் உள்ள குறைகள் வாசிக்கப்பட்டு, விசாரணை படலம் துவங்கிவிட்டது.
கள ஆய்வு கூட்டத்துக்கு ஸ்டாலின் முதலில் அழைத்தது கோயமுத்தூர் மாவட்டத்தைத்தான். அதில் கலந்து கொண்ட ஊராட்சி செயலாளர்கள் புகார் பெட்டிக்கு மூச்சு திணற திணற மனுக்களை செருகித் தள்ளினர். இவையெல்லாம் வாசிக்கப்பட்டு, புகாரில் சிக்கியிருக்கும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை பற்றி விசாரிக்க ஒரு தனிப்படை கோயமுத்தூருக்கு சென்றுவிட்டதாம்.
பொதுவாக ஒரு மாவட்டத்துக்கு ஆய்வுக்கு செல்லும் விசாரணை பேர்வழிகள், அம்மாவட்ட செயலாளருக்கு போன் போட்டு ‘ப்ரோ நல்ல ஹைடெக்கான ரூமை போட்டுக் கொடுங்க.’ என்று கேட்டு, வகையாய் தங்குவார்கள். வந்தவரை நிர்வாகிகளும் குளிரக் குளிரக் கவனித்து அனுப்புவார்கள்.
ஆனால் இந்த முறை அப்படி எந்த செயலும் நடக்கக் கூடாது என்று தெளிவாக சொல்லி அனுப்பியிருக்கிறாராம் ஸ்டாலின். புகாரில் சிக்கியிருக்கும் நபரிடமே காசு வாங்கிக் கொண்டு தனக்கு தவறான தகவல்கள் தரப்படுகிறதா? என்று கண்காணிக்க ஸ்பெஷல் டீம் ஒன்றையும் களமிறக்கியுள்ளாராம்.
ஆகவே விசாரணை படை கர்ண சிரத்தையாக மிக நேர்மையாக விசாரணையை துவக்கியுள்ளனராம் கோயமுத்தூரில். இவர்கள் எங்கே தங்கியுள்ளனர், எப்படி விசாரணை செய்கின்றனர்? என்பதெல்லாம் விளங்காமல் நொந்து போகின்றனராம் மாவட்ட நிர்வாகிகள்.
புகார் உண்மை என்று ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் சென்றால், பதவி காலி! என்பதால் கிலி பிடித்து ஆட்டுகிறதாம் கோயமுத்தூர் நிர்வாகிகளுக்கு.