தினகரனை சுற்றிச் சுற்றி வேலி கட்டும் டெல்லி: என்போர்ஸ்மெண்ட் பராக்! பராக்!

First Published Feb 7, 2018, 3:13 PM IST
Highlights
Delhi to build fence around Dinakaran Encouragement Barak Barack


அமித்ஷா தேசிய அளவில் எத்தனையோ பி.ஜே.பி. எதிர்ப்பாளர்களை சந்தித்திருக்கிறார். அவர்களை நேக்கு போக்கான ரூட்டுகளில் சுண்டி  சுளுக்கெடுத்து சைலண்டும் ஆக்கியிருக்கிறார். ஆனால் அவரது கட்டத்துக்குள் அடங்காத ஒரு டைப்பான ஆசாமியாக வலம் வருவது சாட்ஸாத் நம்ம ஊர் தினகரன் மட்டுமே! ராதாகிருஷ்ணன் நகரில் ரகளையான வெற்றி, புரட்சிப் பயணம் என்று அடுத்தடுத்து சிக்ஸர்களாக அடித்து நொறுக்க துவங்கியிருக்கும் தினாவை ரெட்கார்டு போட்டு அரசியல் கிரவுண்டுக்கு வெளியே அலற அலற துரத்திட டெல்லி லாபி கில்லியாய் திட்டம் போடுகிறது என்கிறார்கள்.
எப்படி அது சாத்தியமாம்?...

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க. தடுமாறியது. இந்த சூழலில், தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பி.ஜே.பி. தலைவியில்லாத அ.தி.மு.க.வை தனது ஹெலிபேடாக மாற்றி அதில் தரையிறங்கி தமிழகத்தை அதகளம் பண்ண  நினைத்தது. ஆனால் சட்டென்று சசிகலா வெடித்துக் கிளம்பினார். ஆனால் கிளம்பிய வேகத்திலேயே சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹரா சிறைக்கு பார்சல் ஆனார். போகும் போது எடப்பாடி பழனிசாமியை தங்கள் சார்பாக முதல்வர் நாற்காலியில் அமர்த்திவிட்டுப் போனார்.

இந்த நிலையில் தங்களுக்கு தோதான பன்னீரின்  ‘தர்மயுத்தம்’ சீசன் 1 ஐ வெகுவாக வரவேற்று பி.ஜி.எம். வாசித்தது பி.ஜே.பி. அதே நேரத்தில் ஆட்சியிலிருக்கும் எடப்பாடி அண்ட்கோவையும் பலவிதமான மந்திரங்களை ஓதியும், யந்திரங்களை காட்டியும் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். ஆனால் தினகரன் மட்டும் பி.ஜே.பி.யின் வட்டத்துக்குள் அடங்காத நபராகவே இருந்தார். காரணம்?...பி.ஜே.பி. தங்களுக்கு உதவுவதே, கட்சியை ஒட்டுமொத்தமாக அமுக்கத்தான் என்று தினகரன் நினைத்ததால்தான். திமிறி எழும் தினகரனை அடக்கிட வழி தேடி யோசித்தது வடக்கு தலைமை.

இந்த நிலையில்தான் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை திரும்பப் பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க முயற்சித்தார் எனும் வழக்கு தினா மீது பாய்ந்தது. டெல்லி குற்றப் பிரிவு போலீஸார் இந்த வழக்கில் தினாவை அள்ளிக் கொண்டு போய் சில காலம் திகாரை சுற்றிக் காண்பித்தனர். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்த தினகரன் அடங்கிப் போவார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் ‘பாளையங்கோட்டை, வேலூர், கோவை, சேலம், பெங்களூரு, டெல்லின்னு எத்தனை சிறையில போட்டாலும் திரும்பி வந்து கட்சிய பிடிப்போம், ஆட்சியை நடத்துவோம்.’ என்று தெனாவெட்டாக பேட்டி தட்டிய தினா கட்சியை விழுங்க துவங்கினார். இதை விட்டால் வேலைக்கு ஆகாது என்ற எண்ணத்தில்தான் பன்னீரும்- பழனிசாமியும் இணைந்து பார்த்தனர். ஆனாலும் தினகரனை அமுக்க முடியவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற அமோக வெற்றி அவரை நோக்கி தேசிய அரசியல் புள்ளிகளை திரும்பிப் பார்க்க வைத்தது. தினகரனின் இந்த வளர்ச்சிக்கு முன்னால் தமிழகத்தை ஆளும் அணியால் எதையும் செய்ய முடியவில்லை. இந்த போக்கை டெல்லியால் சகிக்கவும் முடியவில்லை.
இந்நிலையில்  மக்கள் சந்திப்பு பயணம் துவங்கியிருக்கும் தினாவுக்கு தானாக சேருகிறது தாறுமாறான கூட்டம்.

இதில் டென்ஷனான தமிழக ஆளும் கோஷ்டி ‘இதுக்கு ஒரு எல்லையே இல்லையா குருநாதா?’ என்று வடக்கு நோக்கி கதற, அமலாக்கப்பிரிவு அதிகாரிகளை இறக்கி விட்டிருக்கிறது டெல்லி லாபி. அவர்களின் மூவ் படி கூடிய விரைவில் தினகரன் மீண்டும் கைது செய்யப்படலாம் என்பதே லேட்டஸ்ட் தகவல்.

அதாவது இரட்டை இலையை மீட்க தேர்தல் கமிஷனுக்கு தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றார்! எனும் வழக்கத்தைத்தான் இப்போது அமலாக்க துறையை விட்டு புதிய கோணத்தில் அணுக துவங்கியுள்ளனராம். இந்த வழக்கில் டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீஸாரால் ‘அனுமானங்களை’ தாண்டி எந்த ஆதாரங்களையும் காட்டி வழக்கை ஸ்திடப்படுத்த முடியவேயில்லை. வாய்தா மீது வாய்தா வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

என்னதான் குற்றப்பத்திரிக்கையில் தினகரனின் பெயரை சேர்த்துவிட்டார்கள் என்றாலும் கூட அவர் செய்த குற்றம் என்ன? எவ்வளவு பணத்தை யாருக்கு கொடுக்க முயன்றார்? என்பதையெல்லாம் கண்டறிந்து சொல்லவே முடியவில்லை. இதனால் நீதிபதிகளிடம் அடிக்கடி வகையாய் வாங்கிக் கட்டுகிறது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை.

இந்த நேரத்தில் இந்த வழக்கை கையிலெடுத்திருக்கும் அமலாக்கப்பிரிவு, மளமளவென காய் நகர்த்த துவங்கியுள்ளது. அதன் முக்கிய நிலையாக ஜெ., சசிக்கெல்லாம் முக்கிய வழக்கறிஞராக இருந்தாரே குமார், இப்போது அவர் தினகரனின் மிக முக்கிய வழக்கறிஞராக இருக்கிறாராம்.

அவரது பெயரும் சில மாதங்களுக்கு முன்பு தினகரன் வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாம். ஆக அவரை விசாரணைக்கு ஆஜராக சொல்லி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தினகரன் அண்ட்கோவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்கிறார்கள்.தென்னிந்தியாவிலிருந்து சில கோடிகள் டெல்லி நோக்கி பயணப்பட்டதை விசாரிக்க துவங்கியுள்ளதாம் அமலாக்கப் பிரிவு. அந்த கோடிகள் தினகரன் டீமால் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை நோக்கி நகர்த்தப்பட்டது என்று நிரூபிப்பதே எய்ம்! என்கிறார்கள்.

குமாரிடம் விசாரணை, அடுத்தடுத்து சில சிக்கலான ஆதாரங்கள் என்று சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் தினகரன் கைது படலம் சீசன் 2 துவங்கும் என்கிறார்கள்.
ஆக தினகரனை சுற்றிச் சுற்றி இப்படி வேலி கட்டி அவரது வளர்ச்சியை தடுத்திட டெல்லி லாபி துடிப்பதாக விமர்சகர்கள் கோடிட்டுக் காட்ட்கிறார்கள்.

ஆனால் தினா கோஷ்டியோ ‘எம்புட்டு பிரஷர் கொடுத்து அண்ணனை அமுக்குறீங்களோ அதை விட டபுள் பிரஷர்ல அவரு மேலேறி வந்து சாதிப்பார்.’ என்று ஜஸ்ட் லைக் தட்! ஆக பஞ்ச் டயலாக் பேசி பதறவிடுகிறார்கள்.

click me!