
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தினகரன் கைதாகும் தருணத்தில், அவரை அரசியலில் இருந்து ஒதுக்குவதாக அறிவித்தனர் அமைச்சர்கள்.
அதை தொடர்ந்து, இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் மும்மரமாக இறங்கியது அமைச்சர்கள் குழு. ஆனால், பன்னீர் தரப்பு முன்வைத்த இரண்டு நிபந்தனைகளையும் அவர்களால் முழுமையாக ஏற்க முடியவில்லை.
மேலும், இரு அணிகளும் இணைந்தால், தமது செல்வாக்கு தகர்க்கப்படும் என்று உணர்ந்த தினகரன், தமது ஆதரவு எம்.எல்.ஏ க்கள் மூலம் அதற்கு முட்டுக்கட்டை கொடுத்து வந்தார்.
முதல்வரை கோட்டையில், சந்தித்து அமைச்சர் பதவி கேட்டு பிளாக் மெயில் செய்துவிட்டு, வெளியில் வந்து, தொகுதி பிரச்சினை குறித்து பேசியதன் பின்னணியில் இருந்தது தினகரனே.
முதல்வரை கோட்டையில் சந்தித்த எம்.எல்.ஏ க்களில், பெரும்பாலானோர், தற்போது தினகரனுடன் இருப்பதன் மூலம் அது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், தமது மனைவி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் 11 பேருடன் இன்று, பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து தினகரன் பேசியுள்ளார்.
அப்போது, ஆரம்பத்தில் கோபத்தை காட்டிய சசிகலா, நீ என்ன வேண்டுமானாலும் செய். ஆனால் அது கட்சிக்கும், ஆட்சிக்கும் இடையூறை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது என்று கண்டிப்புடன் கூறி இருக்கிறார்.
அதே சமயத்தில், தினகரனுடன் 11 எம்.எல்.ஏ க்கள் சென்றிருப்பதை உறுதிப்படுத்தி கொண்ட அமைச்சர்கள், நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறையில், தினகரன் எதிர்ப்பை எப்படி சமாளிப்பது? என்பது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.
அப்போது, எக்காரணம் கொண்டும் தினகரனை ஆட்சி, அதிகாரத்தில் குறுக்கிட அனுமதிக்க கூடாது என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஒரு வேளை, தினகரன் தம்மிடம் உள்ள 11 எம்.எல்.ஏ க்களை வைத்து, ஆட்சிக்கு அச்சுறுத்தல் கொடுத்தால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பன்னீரை மீண்டும் உள்ளே இழுத்துவிட வேண்டும் என்று அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர்.
பின்னர், அமைச்சர்கள் 19 பேரும் கூட்டாக சென்று, தினகரனை சமாளிப்பது எப்படி? என்பது குறித்து எடுத்த முடிவை, முதல்வர் எடப்பாடியிடம் தெரிவித்துள்ளனர்.
அதை கவனமாக கேட்ட எடப்பாடி, நீங்கள் அனைவரும் இணைந்து, எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் என்று ஒரே வார்த்தையில், பதில் கூறி உள்ளார்.
எனவே, சிறையில் இருந்துகொண்டே, இரு அணிகளின் இணைப்புக்கு முட்டுக்கட்டை போட்டு வந்த தினகரன், வெளியில் வந்ததும், இரு அணிகளின் இணைப்புக்கு, தாமாகவே வழிகோலி விட்டார் என்றே ஆளும் தரப்பு கூறுகிறது.
மறுபக்கம், தமது நிபந்தனைகளை சற்று தளர்த்தி, அணிகள் இணைப்புக்கு பன்னீரும் சம்மதிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.