திமுகவை தோற்கடிக்க ஆன்மிகம் தேவையில்லை... நிறைய காரணம் இருக்கு... மு.க. ஸ்டாலினுக்கு பாஜக பதிலடி..!

By Asianet TamilFirst Published Dec 13, 2020, 9:46 PM IST
Highlights

தமிழகத்தில் ஆன்மிகத்தைக் கொண்டு திமுகவைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் இல்லை. திமுக தோற்கப் பல காரணங்கள் உள்ளன என்று தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன் கூறியுள்ளார்.
 

தமிழக பாஜக துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன் வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்தியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நிலம், நீர், காற்று என பஞ்ச பூதங்களிலும் ஊழல் நடைபெற்றது. 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட எதையுமே காங்கிரஸ் கூட்டணி விட்டு வைக்கவில்லை. தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும். அவர்கள் விளைவித்த பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்ய முடியும்.

 
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் ஆகும். இதன் மூலம் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும். இடைத்தரகர்களுக்கு வேலையே இல்லாமல் போகும். நாடு முழுவதும் ஒவ்வொரு தாலுகாவிலும் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் விளைப்பொருட்களைக் குளிர்பதனக் கிடங்குகளில் பதப்படுத்தி வைக்க முடியும். பின்னர் உரிய விலை வரும்போது விற்பனை செய்யவும் முடியும். விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வேளாண் சட்டங்களை சில அரசியல் கட்சிகள் போலியான தோற்றத்தை உருவாக்கி, அதில் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள்.
மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிடுகிறார்கள். போராட்டம் என்ற பெயரில் பெரிய கலவரம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள். விவசாயிகளின் போராட்டத்தில் பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், இடைத்தரகர்கள்தான் அதிக அளவில் ஈடுபட்டுள்ளார்கள். போலி தகவல்களை நம்பி விவசாயிகள் ஏமார்ந்துவிடக் கூடாது. அவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டம் குறித்து ஒன்றும் தெரியாது. யாரோ ஒருவர் எழுதிக் கொடுப்பதை அப்படியே பேசி வருகிறார். தமிழகத்தில் ஆன்மிகத்தைக் கொண்டுதான் திமுகவைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் இல்லை. திமுக தோற்கப் பல காரணங்கள் உள்ளன.
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவது குறித்து நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்திருக்கிறார். அவர் தந்தை கட்டிய வீட்டிலா தற்போது அவர் வசித்து வருகிறார். காலத்துக்கு ஏற்ப பழைய வீட்டை அவர் மாற்றியமைக்கவில்லையா? ஏதோ புத்திசாலி என நினைத்து கமல்ஹாசன் பேசி வருகிறார். நாட்டில் யார் பட்டினியாக இருக்கிறார்கள் என்பதை அவர்தான் விளக்க வேண்டும். சினிமாவில் பேசும் வசனத்தை அரசியலில் பேசக் கூடாது.” என்று நரேந்திரன் கூறினார்.
 

click me!