திமுக, அதிமுகவை ஒழிக்க சதி... ரஜினியின் மூலம் திட்டம் தீட்டுகிறார்கள்.. சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!

By Asianet TamilFirst Published Dec 13, 2020, 9:14 PM IST
Highlights

தமிழகத்தில் சமூக நீதியை ஒழிக்க வேண்டுமென்றால் திமுகவையும் அதிமுகவையும் ஒழிக்க வேண்டும் என சிலர் ரஜினியின் மூலம் திட்டம் தீட்டி வருகிறார்கள் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுகவின் மகளிர் அணி, இளைஞர் பாசறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். “தமிழகத்தில் நடிகை, நடிகர் என்று யார் வந்தாலும் கூட்டம் கூடிவிடும். ஆனால், ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் நமக்கே ஓட்டு போடுவார்கள் என கூற முடியுமா? இங்கே எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. அதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும். எம்ஜிஆர் ஒரு தெய்வப்பிறவி. தற்போது அரசியலுக்கு வரும் எல்லோருமே தன்னை எம்ஜிஆர் எனக் கூறிக்கொள்கிறார்கள். இவர்கள் மக்களை முட்டாள் என நினைக்கிறார்கள். இன்றைக்குள்ள இளைஞர்களை யாரும் ஏமாற்ற முடியாது.
சினிமாவில் நடப்பதைப் போல யாரோ எழுதிக் கொடுப்பதை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி சுய சிந்தனையே இல்லாதவர்கள் எல்லாம் தமிழகத்தை மாற்றப் போகிறேன் எனச் சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது? தமிழகத்தின் வாழ்வாதாரச் பிரச்னைகள் என்னவென்று இவர்களுக்குத் தெரியுமா, அதுதொடர்பாக ஏதாவது சொல்லியிருக்கிறார்களா, போராட்டம்தான் நடத்தி இருக்கிறார்களா? 
தற்போது நாட்டை காப்பாற்றப் போவதாகச் சொல்பவர்கள் கொரோனா காலத்தில் ஏழைகளுக்கு என்ன உதவி செய்தார்கள்? இளைஞர்கள் ஏமார்ந்து விடக்கூடாது. தமிழகத்தில் 50 ஆண்டுகாலமாக திமுகவும் அதிமுகவும் கட்டிக்காத்து வந்த சமூகநீதியைக் குலைக்க அவர்களுக்கு ஒரு முகம் தேவைப்படுகிறது. தமிழகத்தில் சமூக நீதியை ஒழிக்க வேண்டுமென்றால் திமுகவையும் அதிமுகவையும் ஒழிக்க வேண்டும் என சிலர் ரஜினியின் மூலம் திட்டம் தீட்டி வருகிறார்கள். 
மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துவிடும். ஜூன் மூன்றாம் தேதிக்குள் புதிய அரசு பதவி ஏற்றுவிடும். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்த அரசு இருக்காது என பேசினார்கள். ஆனால், தற்போது சிறந்த நிர்வாகத்துக்கு முதல் மாநிலம் என தமிழக அரசு பெயர் பெற்றுள்ளது. வரும் தேர்தலில் மிகப் பெரிய பங்காற்றப் போவது சமூக வலைதளங்கள்தாம்.” என்று சி.வி.சண்முகம் பேசினார். 

click me!