நீங்கள் அந்நிய சக்தி காலிகளின் தூதுவர்...! பாரதிராஜாவுக்கு தமிழிசை பதிலடி!

First Published Apr 17, 2018, 12:46 PM IST
Highlights
You are the messenger of foreign power ...! Bharathiraja retaliates to Tamilisai


நடிகர் ரஜினிகாந்தை, பாரதிய ஜனதா கட்சியுடன் ஒப்பிட்டு பேசுவோர் அந்நிய சக்தி காலிகளின் தூதுவர்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

காவிரி மேலாண் வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் நடந்த போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் பலர் போலீசாரால் தாக்கப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒருவரும் தாக்கப்பட்டார். போலீசார் ஒருவரை போராட்டக்காரர்கள் தாக்கியதற்கு ரஜினி கண்டனம் தெரிவித்திருந்தார். காவலர்கள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது என்று ரஜினி கூறியதற்கு கடும் விமர்சனம் எழுந்தன. 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மீது இயக்குநர் பாரதிராஜா கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முழு தமிழகமும் ஒரே குரலில் தங்கள் உணர்வுகளை எதிரொலித்த நேரத்தில் நம், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையும் அறவழியில் போராடியது. ஆனால், நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு, நம்மீது கத்தி வைத்து பதம் பார்க்க நினைக்கும் ரஜினி அவர்களின் சமீபத்திய டுவிட்டர் பேச்சு என்று சாடியுள்ளார்.

அறவழியில் போராடிய எம் தமிழர்கள் உங்களுக்கு வன்முறையாளர்களா? தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசும் பேச்சு இது. இலங்கை தமிழர்களைக் கொன்று குவித்தபோது, குரல் கொடுத்தீர்களா? நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடுனீர்களா? இல்லை ஓர் அறிக்கையாவது விட்டீர்களா? மீத்தேன் பற்றி ஏதாவது வாய் திறந்தீர்களா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது... நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகா காவியின் தூதுவர் என்று. உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது. காவிரி பிரச்சனை பற்றி எரிந்தபோது வெந்து செத்தது எங்கள் தமிழ் இனம். சேதமடைந்தது எங்கள் தமிழர்களின் சொத்துக்கள்... நீங்கள் எங்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம். நடந்த போராட்டம் தனி மனிதர்களுக்கானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு சாப்பாட்டிற்கும் உங்கள் வீட்டு குடி தண்ணீருக்கும் சேர்த்துதான் எங்கள் வீரத் தமிழ் இளைஞர்கள் போலீசர் நடத்திய அடிதடியில் ரத்தம் சிந்தினார்கள் என்றும் பாரதிராஜா கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்தை பாரதிய ஜனதா கட்சியுடன் ஒப்பிட்டுப் பேசுவோர் அந்நிய சக்தி காலிகளின் தூதுவர்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். தமிழிசை தெரிவித்துள்ள இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜாவின் அறிக்கை குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்திருந்தார்.

click me!