சட்ட ஒழுங்கை நிலை நாட்டியதில் தட்டித் தூக்கிய யோகி.. 70% மார்க், அள்ளி வழங்கிய உ.பி மக்கள்.

By Ezhilarasan BabuFirst Published Aug 18, 2021, 5:33 PM IST
Highlights

எந்தக் கட்சி ஆட்சியில் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிறைவேற்றப்பட்டது என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் சுமார் 60 சதவீதம் பேர் யோகி ஆதித்யநாத் ஆட்சியிலேயே சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்ததாக  தெரிவித்துள்ளார். 

எந்தக் கட்சி ஆட்சியில் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிறைவேற்றப்பட்டது என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் சுமார் 60 சதவீதம் பேர் யோகி ஆதித்யநாத் ஆட்சியிலேயே சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்ததாக  தெரிவித்துள்ளார். இதுவரை உபிமை ஆண்ட முதல்வர்களிலேயே மாயாவதி ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருந்ததாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர். நாட்டிலேயே நிலப்பரப்பிலும் மக்கள் தொகையிலும் மிகப்பெரிய மாநிலமாக இருந்து வருகிறது உத்தரப் பிரதேசம், 403 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய சட்டப்பேரவை யாகவும் அது உள்ளது. அச்சிறப்பு மிக்க மாநிலத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இருந்துவருகிறார். மிக நேர்மையாளர் எனவும், ஒழுக்க சீலர் எனவும், யோகி ஆதித்யநாத் அம்மாநில மக்களால் அறியப்படுகிறார். 

உத்திரபிரதேசம் மாநிலம் என்றாலே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் பஞ்சமில்லாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அரங்கேறும் மாநிலம் என பல நாளேடுகளாலும் அன்றாடம் விமர்சிக்கப்படும் மாநிலமாகவே உ.பி இருந்துவருகிறது. ஆனால் இது பாஜகவை குறை வைத்தும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு செய்யப்படும் பிரச்சாரம் என அரசு தரப்பில் அடிக்கடி விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சராக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல், எத்தனையோ மக்கள் நலத்திட்டங்களை யோகி ஆதித்யநாத் கொண்டு வந்திருந்தாலும், சட்டம் ஒழுங்கை சமாளிப்பது என்பது மிகப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. 

இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார், இந்நிலையில் அம்மாநில மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கை எப்படி இருக்கிறது, சட்டம் ஒழுங்கு குறித்து அம்மாநில மக்கள் என்ன நினைக்கிறார்கள், என்பது குறித்து அறியும் வகையில், உத்திரபிரதேசம் 2022  ஜன்கி பாத் சர்வே என்ற பெயரில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை மொத்தம் 7 நாட்கள் அம்மாநிலத்தின் முக்கிய பகுதிகளான கான்பூர் பண்டல்கண்ட் , அவாத், வெஸ்ட், பிரிட்ஜ், காசி, கோராக்ஸ் ஆகிய பகுதிகளில் ரேண்டம் சம்பிளிங் முறையில் சுமார் 4,200 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. 

அதில் அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத், மாயாவதி ஆகிய மூவரில் யாருடைய ஆட்சியின் கீழ் சட்டம்-ஒழுங்கு சரியாக நிலைநாட்டப்பட்டது என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய சிறந்த முதல்வர் அகிலேஷ்தான் என 27 சதவீதம் பேரும், மாயாவதிக்கு 13 சதவீதம் பேரும், இதுவரை இல்லாத அளவுக்கு உத்திரபிரதேசம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிய முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுதான் என 60 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் சவால் நிறைந்த சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதில் சிறந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் என மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். இது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என உறுதியாக நம்பப்படுகிறது. 

அதேபோல கடந்த5 ஆண்டுகளில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான இந்த அரசு எந்த விஷயத்தை சரியாக கையாண்டது என நினைக்கிறீர்கள் என மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு,  பெரும்பாலானோர் சட்டத்தின் ஆட்சி செயல்படுத்துவதில் யோகி சிறப்பாக செயல்பட்டார் என கூறியுள்ளனர். அதற்கு ஆதரவாக 70 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு ரேஷன் வினியோகம் செய்வதில் சிறப்பாக செயல்பட்டார் என 20 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதே போல் மற்ற இன்னும் பிற விஷயங்களில் சிறப்பாக செயல்பட்டார் என 10 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில் சட்டத்தின் ஆட்சியை செயல்படுத்துவதில் யோகி ஆதித்யநாத் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என அம்மாநில மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!