
உத்தர பிரதேச மாநில சிறையில் உள்ள அரசியல் தொடர்புடைய கிரிமினல்களுக்கும், சாதாரண குற்றச்செயலில் ஈடுபட்டு சிறையில் உள்ளவர்களுக்கும், ஒரே வகையான உணவு வழங்குவதுடன், சரிசமமாக நடத்த வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்வாதி தொடர்புடைய தாதாக்களுக்கு செல்போன், பிரியாணி உள்ளிட்ட வசதிகள் சட்டவிரோதமாக கிடைப்பதாக கடந்த அகிலேஷ் யாதவ் ஆட்சியில் பரவலாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இது ஒழிக்கப்படும் என அக்கட்சி உறுதியளித்திருந்தது.
:இந்நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து சிறையில் உள்ள அனைத்து குற்றவாளிகளுக்கும் சமமான உணவு வழங்கப்பட வேண்டும் என்றும் இதில் அரசியல் தொடர்புடைய தாதாக்கள், சாதாரண குற்றவாளிகள் என பாகுபாடு காட்டக்கூடாது என முதலமைச்சர் யோகி உத்தரவிட்டுள்ளார்.
அரசியல் தாதாக்களுக்கு சலுகை காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றவாளிகள் சிறையிலிருந்து வெளியே செல்வதற்கு மருத்துவ சிகிச்சையை சலுகையாக அனுபவிப்பது தடுக்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
போலீஸ் மற்றும் சிறை துறையில் உள்ள ஊழல்கள் தடுக்கப்பட வேண்டும். கிரிமினல்கள் மற்றும் சமூக விரோதிகளுடன் தொடர்பு வைத்துள்ள கறுப்பு ஆடுகளை கண்டுபிடிக்க வேண்டும் என உயரதிகாரிகளுக்கு முதலமைச்சர் யோகி உத்தரவிட்டுள்ளார்.