மல்லையாவை இந்தியா கொண்டு வர எத்தனை மாதங்கள் ஆகும்?

First Published Apr 20, 2017, 6:52 PM IST
Highlights
Vijay Mallya extradition from UK to take a minimum of 6 to 12 months says ED CBI to lead team of officials


ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று லண்டனில் தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த சில நாட்களுக்குமுன் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். சில மணிநேரங்களில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று விடுதலையானார்.

அவரை இந்தியா கொண்டு வர அதிகாரிகள் முயற்சித்து வரும் நிலையில், அதற்கு 6 முதல் 12 மாதங்கள் வரை ஆகும் என சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொழிலதிபர் விஜய் மல்லையா தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று இருந்தார். இந்த கடனை திருப்பிச் செலுத்தக்கோரி ஸ்டேட் வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கடனை திருப்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா லண்டனுக்கு கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 2-ந்தேதி தப்பி ஓடினார். அங்கிருந்த படியே தனது மாநிலங்கள் அவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார்.
 
வங்கிகள் சார்பில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் விஜய்மல்லயாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார். அவரின் பாஸ்போர்ட்டையும் நீதிமன்றம் முடக்கி, நாடு கடத்த உத்தரவிட்டது. இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து பேச்சு வார்த்தையின் முன்னேற்றமாக, கடந்த சில நாட்களுக்கு முன், ஸ்காட்லாந்து யார்டு போலீசார் லண்டனில் விஜய் மல்லையாவை  கைது செய்தனர். ஆனால், அடுத்த 3 மணிநேரத்தில் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று விடுதலையானார்
 
இந்நிலையில், விஜய் மல்லையா இந்தியா அழைத்து வரப்படுவதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மல்லையாவை கைது செய்த சில மணிநேரங்களில் ஜாமீன் பெற்றதுகுறித்து நாங்கள் கவலைப்படவில்லை. இந்தியாவுக்கு மல்லையாவை கொண்டுவரும் நடவடிக்கையில், குறிப்பிடதகுந்த முன்னேற்றமாகவே மல்லையா கைதை பார்க்கிறோம். ஆனால், அதற்கு இன்னும் நீண்டகாலம் இருக்கிறது. மிகவும் எளிதாக விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வந்துவிட முடியாது. ஏறக்குறைய உள்ளூர் நீதிமன்றத்தில் 12 முறை விசாரணையை சந்தித்த பின்பு தான் அது சாத்தியமாகும். சில நேரங்களில் அது உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை கூட செல்லும்” எனத் தெரிவித்தார்.
 
இது குறித்து சி.பி.ஐ. செய்தித்தொடர்பாளர் ஆர்.கே. கவுர் கூறுகையில், “ மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வரும் விவகாரத்தில் நாங்கள் லண்டன் செல்லவேண்டியது இருக்குமா? அல்லது இந்தியாவில் இருந்தபடியே வழக்கை நடத்துவோமா? என்பதுஇன்னும் முடிவு செய்யவில்லை. இந்த விசயத்தில் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு என இரு அமைப்புகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான வழக்கின் விசாரணை மே 17-ந்தேதி தொடங்குகிறது.
 
இந்த விசாரணை தொடங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பே சிறப்பு குழு என்று லண்டன் செல்லும் என எதிர்பார்க்கிறோம். மல்லையாவி் கடன் மோசடி வழக்கு குறித்து நன்கு அறிந்த மும்பை மண்டலம், டெல்லி மண்டலத்தைச் சேர்ந்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அந்த குழுவில் இடம் பெறுவார்கள்.
 
எப்படியும் இந்தியாவுக்கு விஜய் மல்லையாவை கொண்டு வர 6 முதல் 12 மாதங்கள் வரை ஆகும்” எனத் தெரிவித்தார்.

click me!