
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் அது கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் நன்மை கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
கர்நாடகவில் பெரும்பான்மை தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதால் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். கர்நாடகாவில் மே 12 ஆம் தேதி 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரையில்லாத வகையில் மிக அதிக அளவு வாக்குப்பதிவானது. 72.13% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் 5 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 120 இடங்களில் பாஜக முன்னிலை உள்ளது. காங்கிரஸ் 60 இடங்க்ளிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி தோல்வி முகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்களை பொய்யாக்கி, பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க உள்ளது.
கர்நாடக தேர்தல் வெற்றி குறித்து பாஜக தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இந்த வெற்றி தென்னிந்தியாவில் தொடரும் என்று கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். கர்நாடக தேர்தலில் கடுமையாக உழைத்த தொண்டர்களுக்கும், அவர்களுக்கு வழிகாட்டிய எடியூரப்பாவுக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம் என்றார்.
கடுமையான சூழ்நிலையில் இந்த வெற்றி பல கருத்துக்களை இந்தியாவுக்கு எடுத்து சொல்கிறது. காங்கிரஸ் கட்சி எவ்வளவுதான் பிரித்தாலும் சூழ்ச்சியை செய்தாலும் பாஜக வெற்றி பெற்று உள்ளது. இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சரே சித்தராமையாவே பின்னடைவில் இருக்கிறார்.
ஜனதா தளத்தின் உதவியால்தான் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற கருத்து நிலவி வந்தது. இதனை பாஜக தவிடுபொடியாக்கி ஆட்சி அமைக்கிறது. காங்கிரசும் பாஜகவும் போட்டியிடும் தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுகிறது. காங்கிரசும் ஜனதா தளமும் போட்டியிட்ட தொகுதிகளில் ஜனதா தளம் வெற்றி பெறுகிறது.
கர்நாடக தேர்தலில் கடுமையாக உழைத்த பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு வெற்றியை சமர்ப்பணம் செய்கிறோம் என்றார்.
ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் பிரச்சாரம் கர்நாடகாவில் எடுபடவில்லை. பிரிதாளும் சூழ்ச்சி பலிக்கவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் எங்களுக்கு ஒரு வாய்ப்பை கர்நாடக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் கர்நாடக மக்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்.
பாஜகவை கர்நாடக மக்கள் ஏற்றுக் கொண்டு வாக்களித்துள்ளார்கள். கர்நாடக வெற்றி தென்னகத்தின் வெற்றியாக இருக்கும் என்று அமித்ஷா கூறினார். தென்னக மாநிலங்களில் இந்த வெற்றி தொடரும்., தொண்டர்கள் அதிகளவில் பணியாற்றி வெற்றியின் சரித்திரத்தைப் பகிர்ந்திருக்கிறார்கள் என்று தமிழிசை கூறினார்.