
கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி தலைமையிலான அரசு, 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்யாவிட்டால், வரும் 28ம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 12ம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மஜத-காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. கடந்த 23ம் தேதி கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்றார். துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் பரமேஸ்வரா பதவியேற்றார்.
முதல்வர் குமாரசாமிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பெரும்பான்மையை நிரூபித்தார் குமாரசாமி. முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாஜக வெளிநடப்பு செய்ததால், எந்தவித எதிர்ப்புமின்றி பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் குமாரசாமி.
வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காங்கிரஸ்-மஜத சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது. விவசாயிகளின் நலனுக்காக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும். விவசாயக் கடனை 24 மணி நேரத்தில் தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையெனில் வரும் 28ம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குமாரசாமிக்கு முன்னதாக வெறும் 58 மணி நேரம் மட்டுமே முதல்வராக இருந்த எடியூரப்பா, முதல்வராக பதவியேற்றதும் இட்ட முதல் கையெழுத்து, விவசாயக் கடன் தள்ளுபடிக்கானது தான். ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடனை தள்ளுபடி செய்து எடியூரப்பா உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.