
கர்நாடகாவில் பாஜக தான் ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக 104 தொகுதிகளிலும் காங்கிரஸ் 78 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
பாஜக தனி பெரும் கட்சியாக இருந்தாலும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறவில்லை. பாஜகவை ஆட்சியமைக்க விடாமல் தடுக்கும் நோக்கில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கைகோர்த்தது. மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளிப்பதாக மஜத தலைவர் தேவெ கௌடாவிடம் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. குமாரசாமி முதல்வராக பதவியேற்கவும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துவிட்டு ஆட்சியை இழக்க விரும்பாத பாஜக, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் பிரகாஷ் ஜவடேகரை கர்நாடகாவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
காங்கிரஸின் ஆதரவை ஏற்றுக்கொண்டதாகவும் இதுதொடர்பாக சந்திக்க கர்நாடக ஆளுநரிடம் குமாரசாமி நேரம் கோரினார். ஆனால், குமாரசாமிக்கு முன்னதாகவே ஆளுநர் வஜூபாய் வாலாவை பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா சந்தித்தார். ஆளுநரை சந்திப்பதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைப்பது 100 சதவிகிதம் உறுதியாகியுள்ளதாக எடியூரப்பா தெரிவித்தார்.
மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் இரண்டு நாட்கள் அவகாசம் கோரியுள்ளார் எடியூரப்பா.