
தற்போது கர்நாடக அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இவ்வளவு நேரம் முன்னிலை வகித்து வந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பான்மையை இழந்துள்ளது பிஜேபி. நண்பகல் வரை பாரதிய ஜனதாவிற்கு சாதகமாக இருந்த கர்நாடக தேர்தல் களம் பின்னர் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத களமாக மாறியது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் கர்நாடக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி பாஜக 104 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 78 ; ஜேடிஎஸ் 37 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. தற்போதைய நிலையில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் யாருடைய ஆட்சி அமையும் என்பதில் சஸ்பென்ஸ் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலை உருவானவுடன், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர், தேவ கவுடாவுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் காங்கிரஸ் - மஜத கூட்டணியில் முதல்வர் பதவி மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கும், துணை முதல்வர் பதவி காங்கிரசுக்கும் தர ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 20 சீட்டுகளும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 14 சீட்டுகளும் வழங்கவும் இருகட்சிகளும் பரஸ்பரம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் இதுகுறித்து பேசினார். கடைசியில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ள தயார் என காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து இன்று மாலை ஐந்து மணிக்கு இரண்டு கட்சி எம்எல்ஏக்களும் சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருந்தனர்.
பாஜகவும், தொண்டர்களும் சற்றும் எதிர்பார்க்காத இந்த தேர்தல் ரிசல்ட் பாஜகவிற்கு இது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதனையடுத்து கர்நாடகாவிற்கு விரைந்து செல்லுமாறு மத்தியமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஜே.பி. நட்டா, தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த கேப்பில், எடியூரப்பா ஆட்சியமைக்க ஆளுனரை சந்திப்பேன் என கூறினார்.காங்கிரசைப் போலவே பாஜகவும் பேச்சுவார்த்தையில் களமிறங்கி உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடாவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இதில் குமாரசாமிக்கு துணை முதல்வர் பதவியும், அமைச்சரவையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு முக்கிய அமைச்சர் பதவியும் கொடுப்பது குறித்து பேச வாய்ப்புள்ளது. இதனால் கர்நாடகாவில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், திருப்பங்களுக்கு மேல் திருப்பங்களை சந்தித்து வரும் கர்நாடக அரசியல் களத்தில் மத்திய அமைச்சர்களின் வருகையால் மேலும் பல திருப்பங்கள் நிகழுமா? என ஒட்டுமொத்த இந்தியாவே எர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றன.