முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய எடியூரப்பா முடிவு..? நொடிக்கு நொடி அதிரடி அரசியல் மாற்றங்கள்

First Published May 19, 2018, 2:20 PM IST
Highlights
yeddyurappa may resign chief minister before floor test


இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், உறுதியாக பெரும்பான்மை கிடைக்காது என தெரிந்தால், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாகவே முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கினார் ஆளுநர் வஜூபாய்.

இதை எதிர்த்து காங்கிரஸ்-மஜத சார்பில் தொடரப்பட்ட வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இன்று காலை அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் தற்காலிக சபாநாயகர் போபையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பெரும்பான்மையை கண்டிப்பாக நிரூபிப்பேன் என எடியூரப்பாவும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என குமாரசாமியும் உறுதியாக தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இன்னும் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக உள்ள நிலையில், பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என கடைசி நேரத்தில் தெரியவந்தால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாகவே முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. 13 பக்க ராஜினாமா கடிதத்தை எடியூரப்பா வாசிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை வரை பெரும்பான்மையை நிரூபிப்பேன் என உறுதியாக கூறிவந்த எடியூரப்பா, தற்போது ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 

click me!