கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு! 

First Published Apr 24, 2018, 5:54 PM IST
Highlights
Writ petition filled against Girija Vaidyanathan


பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகருக்கு, அடைக்கலம் கொடுத்திருப்பதாக தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர், அண்மையில் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் நிருபர் குறித்து சர்ச்சை பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரது இந்த பதிவுக்கு பத்திரிகையாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை அடுத்து, பேஸ்புக் பக்கத்தில் இருந்த சர்ச்சைக்குரிய அந்த பதிவை நீக்கிவிட்டு, அதற்கு மன்னிப்பும் கேட்டார். ஆனாலும், எஸ்.வி.சேகருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை பத்திரிகையாளர்கள் நடத்தினர்.

இந்த நிலையில், தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம், போலீஸ் நிலையத்தில் புகார் கூறியது. இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனால், எஸ்.வி.சேகர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் எஸ்.வி.சேகர் தலைமறைவாகி விட்டார் என்ற செய்தியும் வெளியானது. எஸ்.வி.சேகர், வீட்டுக்கு வராத நிலையில், தான் தலைமறைவாகவில்லை என்றும் இன்னும் 3 தினங்களில் சென்னை வரவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர், முன்ஜாமின்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நாளை நீதிமன்றத்துக்கு வர உள்ளது.

இந்த நிலையில் பத்திரிகையாளர் கவின் மலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியனாதன் உறவினர் என்பதால் காவல் துறைக்கு ரகசிய உத்தரவிட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

போலீசார் தங்கள் கடமையை ஆற்ற விடாமல், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தடுப்பதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!