கடலூர் திமுக எம்.பி.யால் கொலையான தொழிலாளி..? ராமதாஸும், அன்புமணியும் எடுத்த அதிரடி முடிவு.!

By Asianet TamilFirst Published Oct 16, 2021, 10:56 PM IST
Highlights

கடலூரில் திமுக எம்.பி.யால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை பாமக வழங்கியது. அத்தொழிலாளியின் பேரக்குழந்தையின் கல்விச் செலவையும் ஏற்க முடிவு செய்துள்ளது.
 

இதுதொடர்பாக பாமக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் உள்ள  திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி. ரமேசுக்கு  சொந்தமான  டி.ஆர்.வி. காயத்ரி முந்திரி ஆலையில் பணியாற்றி  வந்த பண்ருட்டி வட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு என்பவர் கடந்த 19-ஆம் தேதி இரவு மக்களவை உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்டவர்களால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கோவிந்தராசு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி  வழக்கை முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,  அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலில் பாமக மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக கோவிந்தராசு கொலை வழக்கில் திமுக எம்.பி. ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட கோவிந்தராசுவின்  மகன் செந்தில் வேல்- அவரது மனைவி வனஜா, கோவிந்தராசுவின்  மகள் வளர்மதி - அவரது கணவர் திருமுருகன் ஆகியோர் சென்னையில் மருத்துவர் அன்புமணி இராமதாஸை சந்தித்து தங்களின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்காக  மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக நன்றி  தெரிவித்துக்கொண்டனர்.  அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பாமக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். அத்துடன் கோவிந்தராசுவின் பெயரக் குழந்தைகளின் கல்விச் செலவை  பாமக ஏற்றுக் கொள்ளும் என்றும் அன்புமணி வாக்குறுதி அளித்தார்.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!