தமிழக அரசு கல்லூரி பணிக்கு இந்துக்களை மட்டும் விண்ணப்பிக்க அழைப்பதா.? ஸ்டாலினுக்கு எதிராக வெடிக்கும் சீமான்.!

By Asianet TamilFirst Published Oct 16, 2021, 10:35 PM IST
Highlights

அரசு சார்பில் தொடங்கப்பட்ட கல்லூரியில் இந்து மதத்தினர் மட்டுமே பணிபுரிய வாய்ப்பளித்து, மற்ற மதத்தினர் பணிபுரியத் தடைவிதிப்பது திமுக அரசின் மதச்சார்பின்மை முகமூடியைத் தோலுரிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசால் கொளத்தூர் தொகுதியில் அண்மையில் தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆசிரியர் மற்றும் பல்வேறு பணிகளுக்காக நடைபெறவிருக்கும் நேர்முகத்தேர்விற்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசுக்குச் சொந்தமான கலைக்கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமென மதத்தீண்டாமையோடு கொடுக்கப்பட்டுள்ள திமுக அரசின் அறிவிப்பு கடும் கண்டனத்திற்குரியது.


தமிழ்நாட்டிலுள்ள எந்த ஓர் அரசு கல்லூரியிலும் வெளிப்படையாக இதுவரை கடைப்பிடிக்கப்படாத மதத்தீண்டாமை, தற்போது திமுக அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடைப்பிடிக்கப்படுவது வெட்கக்கேடானது. தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் மதம் சார்ந்த அமைப்புகளால் நிருவகிக்கப்படும் கல்வி நிறுவனங்களிலும்கூட, மாற்று மதங்களைச் சேர்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் பணிபுரிந்துவரும் வேளையில், அரசு சார்பில் தொடங்கப்பட்ட கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே பணிபுரிய வாய்ப்பளித்து, மற்ற மதத்தினர் பணிபுரியத் தடைவிதிப்பது திமுக அரசின் மதச்சார்பின்மை முகமூடியைத் தோலுரிக்கிறது.
முதல்வருடைய சொந்தத்தொகுதியில் தொடங்கப்பட்ட அரசு கல்லூரியில் நடைபெறும் இத்தகைய மதத்தீண்டாமை முதலமைச்சருக்குத் தெரியாமல் நடைபெறுகிறதா? அல்லது முதல்வர் உத்தரவின் பெயரில் நடைபெறுகிறதா? சமத்துவம், சமூகநீதி என வாய்கிழியப்பேசி, பெரியார் வழியில் செயல்படுவதாகவும், மதச்சார்பற்ற ஆட்சி நடத்துவதாகவும் மார்தட்டும் திமுக அரசின் முற்போக்கு செயல்பாடு இதுதானா? இசுலாமிய,கிருத்துவ மக்களின் பாதுகாவலெனக் கூறிக்கொண்டு வாக்குவேட்டையாடும் திமுக, இந்துக்கள் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பது மதஒதுக்கல் இல்லையா? இதுதான் இசுலாமிய, கிருத்துவ மக்களைப் பாதுகாக்கிற இலட்சணமா? 90 விழுக்காடு இந்துக்களின் கட்சியெனக் கூறிக்கொள்ளும் திமுக பெரும்பான்மை மதவாதத்தைக் கையிலெடுக்கிறதா? என நீளும் கேள்விகளுக்கு என்ன விடையுண்டு!
ஆகவே, ஆளும் திமுக அரசு இத்தகைய மதஒதுக்கல் போக்கைக் கைவிட்டு, கொளத்தூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்காக நடைபெறவிருக்கின்ற, ஆசிரியர் மற்றும் அனைத்துப் பணியாளர் தேர்வுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” என்று அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

click me!