துரை வைகோவுக்கு இந்தப் பதவியை கொடுத்தே ஆகணும்... வைகோவுக்கு நெருக்கடி கொடுக்கும் மதிமுகவினர்.!

By Asianet TamilFirst Published Oct 16, 2021, 9:24 PM IST
Highlights

மதிமுகவில் வைகோ மகன் துரை வைகோவுக்கு பொருளாளர் அல்லது துணைப் பொதுசெயலாளர் பதவியை வழங்க வேண்டும் என்று மதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின்  மகன் துரை வைகோ மதிமுகவில் பொறுப்புக்கு கொண்டு வருவதற்கான பணிகளை அக்கட்சியில் செய்துவருகிறார்கள். ஆனால், வைகோவுக்கு தன் மகன் அரசியலுக்கு வருவதற்கு விரும்பவில்லை என்று தெரித்திருக்கிறார். அண்மையில் செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், “கடந்த 56 ஆண்டுகாலப் பொது வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டுவிட்டேன். 28 ஆண்டுகளாகக் காரில் பயணம், நடைபயணம், ஐந்தரை ஆண்டுகள் சிறை வாழ்க்கை என என் வாழ்க்கையை ஓரளவு அழித்துக்கொண்டேன். என்னுடைய நிலை என் மகனுக்கு வர வேண்டாம். 
அதனால், அவர் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. அரசியலுக்கு வர நான் அவரை (துரை வைகோ) ஊக்குவிக்கவில்லை. சில குடும்பங்களில் வாரிசுகளை அரசியலில் புகுத்துகின்றனர். சிலர் அவர்களைக் கொண்டுவர வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். துரை வராமல் தடுக்க எவ்வளவோ முயற்சித்துவிட்டேன். தற்போது அதையும் மீறி காரியங்கள் நடக்கின்றன.” என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் துரை வைகோவுக்கு, கட்சியின் துணை பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் பதவி வழங்க வேண்டும் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். கோவில்பட்டியில் மதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வைகோவுக்கு அழுத்தம் தரும் வகையில் மதிமுகவினர் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். 

click me!