
அதிமுக எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தின் காலில் விழுவது போல் நடித்து அவரது கன்னத்தில் அறைந்த வசந்தமணி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகான கடந்த ஓராண்டில் நடந்த அரசியல் நிகழ்வுகளும் அதிமுகவில் நிகழ்ந்த மாற்றங்கள், அமைச்சர்கள் அடித்த அந்தர் பல்டிகள் எல்லாம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டம், வறட்சியால் விவசாயிகள் பாதிப்பு, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் என அனைத்து தரப்பு மக்களும் ஏதோவொரு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை 55 ஆயிரத்திலிருந்து 1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தியதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
அதுமட்டுமல்லாமல், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக ஆட்சியாளர்கள் செல்லும்போது போக்குவரத்தை மாற்றியமைத்து மக்களை இன்னல்களுக்கு ஆளாக்கினர். இவ்வாறு பல காரணங்களால் ஆட்சியாளர்கள் மீதும் அரசின் மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக எம்.எல்.ஏவை ஒரு பெண் அறைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ வி.பன்னீர்செல்வம். போளூரில் திருமண விழாவில் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அப்போது, அவரது காலில் விழுவது போல் நடித்து வசந்தமணி என்ற நபர், எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏவை பொது இடத்தில் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போளூரில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது.
அரசின் மீதான வெறுப்பால், எம்.எல்.ஏ மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது தொகுதி தொடர்பான கோரிக்கையை நிறைவேற்றாததால் தொகுதி மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பின் வெளிப்பாடா? அல்லது எம்.எல்.ஏ மீதான தனிப்பட்ட காரணத்திற்காக தாக்குதல் நடத்தப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.