அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் இல்லை நீக்கம்..! கருணாஸ் கொதித்ததன் பின்னணி?

By Selva KathirFirst Published Mar 8, 2021, 1:41 PM IST
Highlights

கடந்த மாதம் வரை அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகள் கேட்டு வந்ததாக கூறி வந்த கருணாஸ் திடீரென கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறியதற்கு காரணம் அவரை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைக்காதது தான் என்கிறார்கள்.

கடந்த மாதம் வரை அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகள் கேட்டு வந்ததாக கூறி வந்த கருணாஸ் திடீரென கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறியதற்கு காரணம் அவரை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைக்காதது தான் என்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், தான் அதிமுக கூட்டணியில் இருப்பதாகவும் இந்த முறை மூன்று தொகுதிகள் வரை அதிமுகவிடம் கேட்டு இருப்பதாகவும் பேட்டி அளித்திருந்தார். ஆனால் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், முக்குலத்தோரை கடைசி வரை நம்ப வைத்து அதிமுக ஏமாற்றிவிட்டதாகவும் என கூட்டணியை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார். ஆனால் உண்மையில் அதிமுக ஏமாற்றியது முக்குலத்தோரை அல்ல கருணாஸைத்தான் என்கிறார்கள்.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கருணாசுக்கு ஒரு சீட் வழங்கப்பட்டது. அதிலும் வெற்றி பெற்று கருணாஸ் எம்எல்ஏ ஆனார். ஆனால் தொகுதி எம்எல்ஏ என்கிற வகையில் திருவாடனை தொகுதிப்பக்கமே கருணாஸ் செல்லவில்லை. இதற்கு காரணம் அதிமுக அரசு தனது தொகுதிக்கு என்று எதுவும் செய்யவில்லை என்று அவர் கூறி வந்தார். இந்த நிலையில் தான் தேர்தல் நெருங்கி வந்த நிலையில் இந்த முறை அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுடனும் கூட்டணிக்காக கருணாஸ் தரப்பு அணுகியது. இதில் திமுக தரப்பு தங்களிடம் ஏற்கனவே அதிக கட்சிகள் உள்ளதாக பதில் அளித்த காரணத்தினால் மறுபடியும் அதிமுக தரப்பை கருணாஸ் தரப்பு அணுகியுள்ளது.

இதனை ஏற்கனவே மோப்பம் பிடித்த அதிமுக, திமுகவிடம் சென்றுவிட்டு நம்மிடம் வரும் கருணாசுக்கு எதற்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று டீலில் விட்டது. அத்துடன் கருணாசை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கும் அதிமுக தரப்பு அழைக்கவில்லை. அதாவது மறைமுகமாக கருணாசை கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற்றியுள்ளது. இதனால் தான் கொதித்து எழுந்த கருணாஸ் திடீரென செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சீறியுள்ளார். அத்துடன் முக்குலத்தோருக்கு எதிராக அதிமுக அரசு செயல்படுவதாகவும் பகீர் புகார் கூறியுள்ளார்.

ஆனால் இதை எல்லாம் அதிமுக பொருட்படுத்தவில்லை என்கிறார்கள். கடந்த தேர்தலில் சசிகலா கருணாசை கூட்டணிக்கு அழைத்து வந்தார். காலம் முழுவதும் தான் சசிகலாவுக்கு விசுவாசமாக  இருப்பேன் என்று கருணாஸ் கூறி வருகிறார். எனவே அவரை இந்த முறை மறுபடியும் எம்எல்ஏ ஆக்கினால் தேர்தலுக்கு பிறகு சசிகலாவை சந்திப்பார் என்பதால் அவரை அதிமுக தலைமை டீலில் விட்டுவிட்டது. மேலும் கருணாஸ் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சை கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்துள்ளார். எனவே அவரும் கருணாசை கூட்டணியில் சேர்க்க விரும்பவில்லை. உண்மை இப்படி இருக்க கூட்டணியில் இருந்து விலகுவதாக கருணாஸ் டிராமா நடத்தியுள்ளதாக கூறி சிரிக்கிறார்கள் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள்.

இதே போல் திமுகவை பொறுத்தவரை கருணாஸ் கட்சிக்கு என்று எந்த கட்டமைப்பும் இல்லை என்று ஐ பேக் ரிப்போர்ட் கொடுத்துள்ளது. சென்னையில் இரண்டு மூன்று வழக்கறிஞர்களை வைத்துக் கொண்டு கட்சி இருப்பது போல் கருணாஸ் காட்டி வருவதாகவும் அவருக்கு என்று தொண்டர் பலம் சிறிது கூட இல்லை என்றும், மேலும் ஆழமாக விசாரித்தால் கருணாஸ் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றே அந்த சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நம்பத் தயாராக இல்லை என்றும் ஐ பேக் ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். இதனால் தான் திமுகவும் கருணாசை கண்டுகொள்ளாமல் இருப்பதாக சொல்கிறார்கள்.

click me!