ஜெயலலிதாவை விட எடப்பாடி கறார்..! விழி பிதுங்கும் தேமுதிக..! பேச்சுவார்த்தையில் நடப்பது என்ன?

By Selva KathirFirst Published Mar 8, 2021, 1:31 PM IST
Highlights

இதுவரை 5 கட்டங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும் தேமுதிக – அதிமுக தொகுதி உடன்பாடு ஏற்படாமல் இழுபறியாகியுள்ளது.

இதுவரை 5 கட்டங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும் தேமுதிக – அதிமுக தொகுதி உடன்பாடு ஏற்படாமல் இழுபறியாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலை போல இந்த முறையும் தேமுதிகவை கடைசியாகவே அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அப்போது முதல் தற்போது வரை இதுவரை 5 கட்டங்களாக பேச்சவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. நான்கு கட்ட பேச்சுவார்த்தை பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற நிலையில் 5வது கட்ட பேச்சுவார்த்தையில் எல்.கே.சுதீஷ் பங்கேற்றார். இதுநாள் வரை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி பேச்சுவார்த்தையை முன்னெடுத்த நிலையில் இந்த முறை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே தேமுதிக குழுவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனாலும் கூட தேமுதிக – அதிமுக இடையே தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கு காரணம் தேமுதிக கோரும் தொகுதிகளும் அதற்கு அதிமுக கொடுக்க முன்வந்துள்ள தொகுதிகளும் தான் என்கிறார்கள். 41 தொகுதிகள் என தேமுதிக பேச்சுவார்த்தையை ஆரம்பித்த நிலையில் 9 தொகுதிகள் தான் என அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியது. இந்த இரண்டு எண்ணிக்கைகளுக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமாக இருந்தது. இதனால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு செல்வதையே தேமுதிக தவிர்த்து வந்தது. பிறகு 11 தொகுதிகள் என அதிமுக தரப்பு ஏறி வந்தது.

இதனை அடுத்து பாமக மற்றும் பாஜக கட்சிகளுக்கு முறையே 23 மற்றும் 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. எனவே தங்களுக்கும் அதற்கு இணையாக 25 தொகுதிகள் வேண்டும் என்று தேமுதிக இறங்கி வந்தது. ஆனால் அதிமுக தரப்பில் இருந்து 11 தொகுதிகள் என்பதை தாண்டி வரவில்லை. ஒரு கட்டத்தில் 13 தொகுதிகள் வரை வழங்க அதிமுக தரப்பு முன்வந்தது. ஆனால் 13 தொகுதிகள் போதாது 25 தொகுதிகள் வேண்டும் என்று தேமுதிக கோரிய நிலையில் கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக தரப்பு ஆசை காட்டியது. ஆனாலும் கூட 25 தொகுதிகளில் இருந்து குறைந்து வராமல் தேமுதிக இழுத்தடித்தது.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி – எல்.கே.சுதீஷ் தலைமையிலான குழுவை சந்தித்து பேசினார். அப்போது பாமகவிற்கு நிகராக தங்களுக்கு 23 தொகுதிகளாவது வேண்டும் என்று தேமுதிக தரப்பு வலியுறுத்தியதாக சொல்கிறார்கள். ஆனால் அதிமுக தரப்பில் இருந்து 16 தொகுதிகள் என்று கூறியுள்ளதாக கூறுகிறார்கள். சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் தேமுதிகவிற்கு இவ்வளவு தான் தர முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கறார் காட்டியதாகவும் சொல்கிறார்கள். எடப்பாடி இந்த 16 தொகுதிகளை தருவதாக கூறுவதற்கு முன்பே எஸ்.பி.வேலுமணியும் இதே எண்ணிக்கையை அதிகாரப்பூர்வம் இல்லாமல் கூறியிருந்தாக கூறுகிறார்கள்.

எனவே அதிமுகவை பொறுத்தவரை தேமுதிகவிற்கு 16 தொகுதிகள் என்பதை தாண்டி உயர்த்தப்படாது என்று எடுத்துக்கூறப்பட்டுள்ளதாகவும் இதன் பிறகு துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சை சந்தித்து எல்.கே.சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் மூலம் சில தொகுதிகளை உயர்த்தலாம் என சென்றவர்களுக்கு அங்கும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவசரமாக திரும்பிய தேமுதிக குழு 16 தொகுதிகள் என்பதை ஏற்கலாமா? வேண்டாமா? என ஆலோசனையை தொடங்கியுள்ளது. மேலும் ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி கறார் காட்டுவதாகவும் இதற்கு மேல் கூடுதலாக பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று பிரேமலதாவிடம் தேமுதிக குழு எடுத்துக்கூறியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

click me!