நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தலா? திமுகவிற்கு அதிர்ச்சி அளித்த தேர்தல் ஆணையம்...!

By Ajmal KhanFirst Published Mar 10, 2022, 11:36 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல்2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளநிலையில் அந்த தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
 

சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் தனி தனியாக தேர்தல் நடத்துவதால் கூடுதல் செலவு ஏற்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு  3,426 கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளது. இந்த தொகை கடந்த மக்களவை தேர்தல் நடத்துவதற்கு செலவு செய்யப்பட்டதை விட  131 சதவிகிதம் அதிகமாக ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இத்தொகையில் தேர்தல் பாதுகாப்புச் செலவினங்களை   அந்தந்த மாநிலங்களே அதனை ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதே போல தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கு 700 கோடி ரூபாய் வரை செலவு ஏற்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனை கருத்தில் கொண்டே நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதற்கான நடவடிக்கையும் மத்திய அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக தேர்தல் அந்த அந்த மாநில சூழலுக்கு ஏற்ப நடத்தப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வந்தால் ஒரே செலவுடன் தேர்தலை நடத்தி முடிக்கலாம் என மத்திய அரசு நினைத்துள்ளது. இதற்கு மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் இதற்கு எதிர்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா என்றால் கேள்வி குறியாக உள்ளது.

27 அமாவாசைக்குள் தேர்தல்

அதே நேரத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக பெரும்பாண்மையோடு உள்ளதால் இந்த மசோதா நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்திற்கும் தேர்தல் வர உள்ளதாக கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தனர். மத்தியில் இருந்து நம்ப தகுந்த தகவல் வந்துள்ளதாகவும் எனவே சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் 27 அமாவாசை தான் உள்ளதாகவும் தொண்டர்களை உற்சாகப்படுத்தினர். இதனால் விரைவில் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதே நேரத்தில் இதற்கு வாய்ப்பு இல்லையென்று திமுக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்து வருகின்றனர். அப்படியே தேர்தல் வந்தாலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களை விட கூடுதல் இடங்களை திமுக கைப்பற்றும் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தெரிவித்திருந்தார்.

தேர்தலை நடத்த தயார்


இந்தநிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல யோசனை எனவும், தேர்தல் ஆணையம் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளதாகவும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் கருத்து தெரிவித்த சுஷில் சந்திரா, 5 மாநில தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக ஏ.என்.ஐ நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில்  'உங்கள் வேட்பாளரை அறிந்து கொள்ளுங்கள்' என்னும் ஆப் மூலம் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும் என கூறினார். இந்த தேர்தலில் 6 ஆயிரத்து 900 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில்  1600 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என தெரியவந்ததாக கூறினார். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சுஷில் சந்திரா, சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது நல்ல யோசனை என தெரிவித்தார். ஆனால் இதற்கு அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கூறினார். எனவே ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாகவும் அப்போது  கூறினார். இந்த தகவல் திமுகவினரிடம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசு மறைமுகமாக கூறி வந்த நிலையில் அதிமுக தலைமை இந்த தகவலை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தது  எனவே நாடாளுமன்றத்தோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு உருவாகியுள்ளதாகவே கூறப்படுகிறது. 

click me!