
சமூக நீதி பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினால் பத்து நிமிடம் பேச முடியுமா என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையில் மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதை செய்வேன் அதை செய்வேன் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுவது தேர்தலுக்கான மட்டுமே. தேர்தலை மனதில் வைத்து கூறப்படுவதே அந்த வாக்குறுதிகள். மஞ்சள் பை என்கிறார்கள், நெகிழியை முழுவதும் ஒழிக்காமல் மஞ்சப்பை பயன்பாடு என்பது யாரை ஏமாற்ற என்று தெரியவில்லை. ஒன்றை முழுவதும் ஒழித்துவிட்டால் தானே நல்லதை மக்கள் பயன்படுத்துவார்கள். நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும் என்பது அரசாங்கம் எந்த நிலையில் இருக்கிறது என்று அரசியல் கட்சியினரை மட்டுமல்ல, சராசரி மனிதரை இந்த அறிவிப்புக்கள் குழப்பும். அரசாங்கம் ஒரு தெளிவோடு இருக்க வேண்டும்.
ஏனோ தானோ என்று இருப்பதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள். இதுமட்டுமா? அனைத்திலும் லஞ்சம். கட்டிடம் கட்டினால் லஞ்சம், மின் இணைப்புக்கு லஞ்சம் என தொட்டதுக்குலாம் லஞ்சம் வாங்குகிறார்கள். கட்டிடம் கட்டவும் மின் இணைப்புக்கும் கவுன்சிலர் கையெழுத்து வேண்டும். அதற்காக அவர் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்க முடியும். இதற்காக தனக்கு கிடைக்கும் கவுன்சிலர் சீட்டு வேறு யாருக்காவது கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் அதற்காக எதிர் தரப்பினரை கொலை செய்கிறார்கள். இது எவ்வளவு பெரிய மோசடி. இதுதான் தற்போது மேடவாக்கம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது சமூகநீதி கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். சமூகநீதி என்றால் என்ன என்று மு.க.ஸ்டாலின் பத்து நிமிடம் பேச சொல்லுங்கள். நாங்கள் அனைவரும் அது பற்றி தெரிந்துக் கொள்கிறோம். உங்கள் கட்சி எத்தனை இடங்களை நாடாளுமன்ற தேர்தலில் முஸ்ஸிம் சமூக மக்களுக்கு வழங்கியது. ஒரே ஒரு இடம். அதுவும் கூட்டணிக்கு கட்சிக்கு வழங்கி அங்கே நவாஸ் கனி வெற்றி பெற்றார்.
நீங்கள் போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட முஸ்ஸிம் சமூகத்தை சேர்ந்த யாருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை. இது தான் சமூகநீதியின் அடையாளமா? சாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொண்டு இடஒதுக்கீடு வழங்க இவர்கள் தயாராக இருக்கிறார்களா? வாக்கு கேட்க மட்டும் தலைகளை எண்ணி 5 வாக்குக்கு 5 ஆயிரம் பணம் கொடுக்க தெரிகிறதே, அதே போல் வகுப்புவாரி இடஒதுக்கீடு செய்ய வேண்டியதுதானே? அதில் உங்களுக்கு என்ன தயக்கம். அதை விட்டுவிட்டு இந்தா நீங்க வாங்க 3 சதவீதம், உங்களுக்கு 2 சதவீதம் என்று கொடுக்க என்ன கட்டாயம் இருக்கிறது. 50 பேர் இருக்கிற இடத்தில் 5 பேரின் சாப்பாட்டை கொடுத்தால் இதுதான் சமூக நீதியா? உங்கள் நாற்காலியே நாங்கள் போட்ட பிச்சை, நீங்கள் என்ன எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கிறீர்கள், உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தார்கள். இதற்கு எல்லாம் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஆவேசமாக தெரிவித்தார்.