பாயிண்டை பிடித்த வானதி சீனிவாசன்! ஸ்டாலின் மகள் இருந்தும்.. சமூக நீதியை செயலில் காட்டுங்க முதல்வரே.!

By Raghupati R  |  First Published May 9, 2023, 6:56 PM IST

பட்டியலினத்தவருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவாரா முதல்வர் ஸ்டாலின் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.


கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 7ம் தேதி சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற திமுக அரசின் இரண்டாண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திராவிடம் காலாவதியான கொள்கை என ஆளுநர் ஆர். என். ரவி கூறியிருக்கிறார். 

"திராவிடம்" என்பது காலாவதியான கொள்கை அல்ல. சனாதனத்தை காலாவதியாக்கிய கொள்கை. ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்திற்கு மட்டும்தான் உண்டு. அதனால்தான் திராவிடத்தை பார்த்து ஆளுநர் பயப்படுகிறார். தமிழகத்தின் திராவிட மாடலை, இந்தியா முழுமைக்கும் கொண்டுசேர்ப்போம்" என கூறியிருக்கிறார். கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக தமிழகம் வந்த பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் எழுதிய, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே, திமுகவின் திராவிட இனவாதம்.

Latest Videos

undefined

 

திராவிடம் என்ற நிலப்பரப்பை, திராவிட இனமாக கற்பனையாக சித்தரித்து உருவாக்கப்பட்ட கட்டுக்கதைதான் திராவிடத்தின் அடிப்படை. இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவாக 1916ல் சென்னை மாகாணத்தில், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உருவானது. இதுவே பின்னாளில் நீதிக்கட்சி, திராவிடர் கழகமாகி, திமுகவானது. நீதிக்கட்சி செல்வாக்கு பெறத் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் சுதந்திரப் போராட்டமே நீர்த்துப் போனது.

வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, வ. வே. சு. ஐயர், மகாகவி பாரதியார் உள்ளிட்டோர் தங்கள் வாழ்வை தியாகம் செய்து எழுப்பிய சுதந்திரத் தீயை தனி தமிழ்நாடு, திராவிட நாடு என பேசிப்பேசி நீதிக்கட்சி அணைத்தது. 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது அதனை கருப்பு தினமாக அறிவித்தார் ஈ. வெ. ரா. இதுதான் திமுகவின் உண்மையான வரலாறு. அண்ணா மறைவுக்குப் பிறகு அரை நூரற்றாண்டு காலம் திமுக தலைவராகவும் அக்கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் முதல்வராகவும் இருந்தவர் கலைஞர் கருணாநிதி.

அவரது மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் முதல்வராகவும், திமுக தலைவராகவும் இருக்கிறார். மகன் உதயநிதியை அமைச்சராக்கி, திமுகவின் அடுத்த வாரிசையும் தயார்படுத்திவிட்டனர். உதயநிதியின் மகன் இன்பநிதியையும் ஏற்போம் என மூத்த அமைச்சர்களே பேசத் தொடங்கிவிட்டனர். கட்சித் தலைமைக்கும், ஆட்சித் தலைமைக்கும் பிறப்பின் அடிப்படையில் ஒரு குடும்பத்திலிருந்து மட்டுமே வர முடியும் என்பதுதான் திமுக மாடல், திராவிட மாடல். இது ஏற்கெனவே காங்கிரஸிலும், பல்வேறு மாநில கட்சிகளிலும் உள்ளது.

ஜனநாயகத்திற்கு எதிரான, சமத்துவத்திற்கு எதிரான, சமூகநீதிக்கு எதிரான இந்த திராவிட மாடல் யாருக்கும் தேவையில்லை. பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. கடைக்கோடி கிராமத்தில் உள்ள தொண்டர்கூட பாஜகவில் தலைவராக, பிரதமராக, முதல்வர்களாக வந்துவிடமுடியும். பெண் உரிமை பேசும் முதல்வர் ஸ்டாலின், மகள் இருந்தும் தனது அரசியல் வாரிசாக, மகன் உதயநிதியைத்தான் தேர்வு செய்துள்ளார். அரசியலில் கூட ஆணாதிக்கம்தான். இதுதான் திராவிட மாடல்.

இதையும் படிங்க..கடைசி 3 அஸ்திரங்கள்! டிடிவி தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பில் அவரும் இருந்தாரு.! அடேங்கப்பா.! என்ன நடந்தது?

சமத்துவம், சமூகநீதி பற்றியெல்லாம் ஸ்டாலின் பேசாத கூட்டமே இல்லை. ஆனால், திமுக கட்சியிலும், ஆட்சியிலும் தமிழகத்தில் 20 சதவீதத்தினருக்கும் அதிகமாக உள்ள பட்டியலினத்தவர்களுக்கு எந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவியும் இல்லை. இருப்பதிலேயே உச்சபட்ச அதிகாரம் என்றால் அது, அரசியல் அதிகாரம் தான். அரசியல் அதிகாரம் கிடைத்தால் ஒரு சமூகம் தனக்கு தேவையானதை தானே எடுத்துக் கொள்ள முடியும். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், முதல்வர்களாக, உள்துறை, நிதி, பொதுப்பணி, தொழில் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராகும்போது அவர்களுக்கு தேவையானதை அவர்களே செய்து கொள்ள முடியும்.

ஆனால், திமுக எப்போதுமே அவர்களை, கொடுக்கும் இடத்தில் வைக்காமல், வாங்கும் இடத்திலேயே வைத்திருக்கிறது. எப்போது பார்த்தாலும் நாங்கள் பட்டியலினத்தவர்களுக்கு அதை செய்தோம், இதை செய்தோம் என்று பட்டியலிட்டு கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையானதை அவர்களே எடுத்துக் கொள்ளும் வகையில் அரசியல் அதிகாரம் வழங்க வேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதி.

திமுக அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் செய்ய முதல்வர் மு. க. ஸ்டாலின் தயாராகி வருவதாக செய்திகள் வருகின்றன. இந்த அமைச்சரவை மாற்றத்திலாவது பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவியும், உள்துறை, நிதி, பொதுப்பணி, தொழில் ஆகிய முக்கிய துறைகளில் ஒன்றையும் வழங்குவார் என்று நான் நம்புகிறேன். பல்லாவரத்தில் பேசிய சமூக நீதியை அவர் செயலில் காட்ட வேண்டும். இதுவே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்றுதனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க..குஜராத்தில் 40 ஆயிரம் பெண்கள் மாயம்.. மனித கடத்தல், விபச்சாரத்துக்கு தள்ளப்படும் கொடுமை - என்சிஆர்பி தகவல்

click me!