2024ல் ஒரே நாடு ஒரே தேர்தலா.? பாஜகவுக்கு டப்பிங் பேசி மிரட்டலா.? அரசியல் அமாவாசையென இபிஎஸ்ஸை பொளந்த ஸ்டாலின்!

Published : Feb 15, 2022, 07:02 AM IST
2024ல் ஒரே நாடு ஒரே தேர்தலா.? பாஜகவுக்கு டப்பிங் பேசி மிரட்டலா.? அரசியல் அமாவாசையென இபிஎஸ்ஸை பொளந்த ஸ்டாலின்!

சுருக்கம்

“திமுக ஆட்சிக்கு இன்னும் 27 அமாவாசைகள்தான் இருக்கிறதாம். புதிதாக ஜோசியம் சொல்லியிருக்கிறார்கள். அரசியல் அமாவாசைகள் யார் என்பதை தெரிந்துதான், ‘அமைதிப்படை’யாக வாக்களித்து, அவர்களை இன்றைக்கு புலம்ப விட்டிருக்கிறார்கள் நம் தமிழக மக்கள்".

2024-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப் போகிறது என்று ஆருடம் சொல்கிறார் பழனிசாமி. கற்பனையில் கோட்டை கட்டிக் கொண்டு, பாஜகவுக்கு டப்பிங் பேசுகிறார் பழனிசாமி. அவர் யாரை மிரட்டுகிறார்? திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, 2024-ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பேசி வருகிறார். அப்போது தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் வரும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். இபிஎஸ் மட்டுமே பேசி வந்த இந்த விஷயத்தை ஓபிஎஸ் மற்றும் அதிமுக மாஜி அமைச்சர்களும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதிமுகவினரின் இந்தப் பேச்சுக்கு இதுவரை திமுக தரப்பில் பதில் சொல்லப்படாமல் இருந்தது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்கு பதிலளித்துள்ளார். மதுரை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி காணொலி வழியாக ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “திமுக ஆட்சிக்கு இன்னும் 27 அமாவாசைகள்தான் இருக்கிறதாம். புதிதாக ஜோசியம் சொல்லியிருக்கிறார்கள். அரசியல் அமாவாசைகள் யார் என்பதை தெரிந்துதான், ‘அமைதிப்படை’யாக வாக்களித்து, அவர்களை இன்றைக்கு புலம்ப விட்டிருக்கிறார்கள் நம் தமிழக மக்கள். அதிமுக அஸ்தமனத்தில் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் அதிமுக வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்தனர். ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மரண அடியை அதிமுகவுக்கு கொடுத்தார்கள். அடுத்து வந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் சுத்தமாகக் காணாமல் போனது அதிமுகதான். 

இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்கப்போகின்ற கட்சியும் அதிமுக. அதிமுகவுக்கு ஆக்கபூர்வமான அரசியல் என்பதே தெரியாது. அடிமைத்தனம்தான் அக்கட்சிக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரிந்த அரசியல் எல்லாமே அமாவாசை அரசியல்தான். 2024 முதல் நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப்போகிறது என்று ஆருடம் சொல்கிறார் பழனிசாமி. இவருடைய ஞானதிருஷ்டிக்கு மட்டும்தான், இதெல்லாம் தெரியும் போல. கற்பனையில் கோட்டை கட்டிக் கொண்டு, பாஜகவுக்கு டப்பிங் பேசுகிறார் பழனிசாமி. அவர் யாரை மிரட்டுகிறார்? மிசாவையே பார்த்த இந்த ஸ்டாலினை உங்களால் மிரட்ட முடியுமா? கற்பனையில்கூட கனவு காணாதீர்கள். கூவத்தூரில் தவழ்ந்து சென்று ஆட்சியைப் பிடித்தவர் என்று நினைக்கிறீர்களா? 

சசிகலாவின் காலைப் பிடித்து பதவியைப் பெற்று, பின்னர் அவருடைய காலையே வாரி தனது பதவியை நிலைப்படுத்திக் கொண்டு, தன்னுடைய நாற்காலியை நான்காண்டு காலம் காப்பாற்றுவதற்காக, பாஜகவுக்கு பாதம் தாங்குவதையே வழக்கமாக வைத்திருந்து, டெல்லிக்குக் காவடி எடுத்த சுயநலத்தின் மொத்த உருவம்தான் நீங்கள்தான் பழனிசாமி. சசிகலாவைப் பார்த்தால் பயம். ஓபிஎஸ்ஸைப் பார்த்தால் பயம், டெல்லியைப் பார்த்தால் பயம். கொடநாடு பங்களா என்று சொன்னாலே பயம். இப்படி அஞ்சி நடுங்கி வாழும் பழனிசாமிக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னைப் பார்த்துப் பேச என்ன தகுதி இருக்கிறது? பழனிசாமியின் இதுபோன்ற பொறுப்பற்ற - ஆணவப் பேச்சுக்களுக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான முற்றுப்புள்ளி வைக்கப்படும்" என்று ஸ்டாலின் பேசினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!