நேற்று காரைக்குடி அருகே புதுவயல், மற்றும் கண்டனூர் பேரூராட்சிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய ப.சிதம்பரம், ‘நானும் பணம் புழங்கக்கூடிய துறையில் அமைச்சராக இருந்துள்ளேன். நிர்வாகத்திடம் பணம் இல்லை என்பதை நான் ஏற்க மாட்டேன். மக்களுக்கு செய்ய வேண்டும் என மனம் இருந்தால்போதும்.6 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிகள் இல்லாமல் அதிகாரிகளை கொண்டு உள்ளாட்சி நடத்தியது அரசியல் சாசனத்தை மீறிய செயல்.
அதிகாரிகள் வர்க்கம் எந்த வேலையையும் செய்யமாட்டார்கள். பணம் இல்லை, விதியில் இடமில்லை என்று செய்ய மாட்டார்கள். மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் 10க்கு 5 வேலைகளாவது நடக்கும். உள்ளாட்சி நடத்தாத அதிமுகவினருக்கு உள்ளாட்சி தேர்தலில் வாக்கு கேட்க அருகதை இல்லை.
திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அமைத்து தந்த மேடையில் நின்று கொண்டு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் பேசுவது விந்தை. திமுகவினர் 9 மாத காலத்தில் தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளனர். படிப்படியாகத்தான் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். குடும்ப தலைவிகளுக்கு 1000 வழங்கும் திட்டம் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக வங்கி கணக்கு சரிபார்க்கப்பட்டு விரைவில் 1000 வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். சட்டமன்ற தேர்தலில் நம்பிக்கை வைத்து வாக்களித்ததை போல 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 97 சதவீத இடங்களை தந்ததை போல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வாக்காளர்கள் காங்கிரஸ், திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும்’ என்று கூறினார்.