திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? சஸ்பென்ஸ் வைத்த வைகோ.. மா.செ கூட்டத்தில் நடந்தது என்ன?

By Selva KathirFirst Published Dec 7, 2020, 12:38 PM IST
Highlights

காணொலி வாயிலாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நடத்திய மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக வைகோ புதிய சஸ்பென்ஸ் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காணொலி வாயிலாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நடத்திய மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக வைகோ புதிய சஸ்பென்ஸ் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016 தேர்தல் வரை தமிழகத்தில் திமுகவை ஆட்சிப்பொறுப்பில் ஏற அனுமதிக்க மாட்டேன் என்கிற ரீதியில் பிரச்சாரம் செய்து வந்தார் வைகோ. ஆனால் 2016ல் வைகோ கட்டமைத்த மக்கள் நலக்கூட்டணி படு தோல்வி அடைந்தது. ஜெயலலிதா மறுபடியும் முதலமைச்சர் ஆனார். இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக வைகோ திமுக கூட்டணியில் இணைந்தார். உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் வைகோவின் மதிமுக போட்டியிட்டது. நாடாளுமன்ற தேர்தலிலும் மதிமுக திமுக கூட்டணியில் நீடித்தது. ஆனால் அப்போது மதிமுகவிற்கு ஈரோடு எனும் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே திமுக ஒதுக்கியது.

பிறகு கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ஒப்புக் கொண்டபடி வைகோவை நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பியாகவும் திமுக அனுப்பி வைத்தது. ஆனால் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் 4 முதல் 6 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறுகிறார்கள். அதுவும் திமுக கொடுக்கும் தொகுதிகள் தான் என்று அந்த கட்சியின் தலைமை கடுமை காட்டுவதாக சொல்கிறார்கள். சட்டப்பேரவை தேர்தலில் மதிமுகவிற்கு ஒதுக்க வாய்ப்புள்ள தொகுதிகளின் விவரத்தை தன்னிச்சையாக வைகோவிற்கு திமுக தலைமை அனுப்பி வைத்ததாகவும் பேச்சு அடிபடுகிறது.

இது வைகோவை கவலை அடைய வைத்துள்ளதாக அவரது கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் பதவியில் அமர வைக்காமல் ஓயப்போவதில்லை என்று தான் சூளுரைத்துள்ள நிலையிலும் தனது கட்சிக்கு வெறும் 6 தொகுதிகள் தான் என்று திமுக கடுமை காட்டுவதை வைகோவால் ஜீரனிக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தான் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்கிற ரீதியில் திமுக அடுத்தடுத்து நிபந்தனை விதிப்பதும் வைகோவிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.

இந்த நிலையில் தான் கடந்த சனிக்கிழமை அன்று மதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் வைகோ காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் திமுக கூட்டணியை தவிர வேறு வழியில்லை என்கிற ரீதியில் பேசியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவிற்கு சாதகமான ஈரோடு தொகுதியை ஒதுக்கியது அத்துடன் கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் வைகோவை ராஜ்யசபா எம்பி ஆக்கியது என திமுக பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதை சில மதிமுக மாவட்டச் செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதே சமயம் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சில திமுக மாவட்டச் செயலாளர்கள் தங்களை உதாஷீனப்படுத்தியது, இடத்தை ஒதுக்கிவிட்டு பிறகு உள்ளடி வேலைகளை பார்த்தது போன்றவற்றையும் வைகோவின் கவனத்திற்கு மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கொண்டு சென்றுள்ளனர். இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்ட வைகோ சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி என்பதை உறுதிப்படுத்தவில்லை என்கிறார்கள். அதே சமயம் கூட்டணி குறித்து தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கலாம் என்று சஸ்பென்ஸ் வைத்துவிட்டு வைகோ பேச்சை முடித்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

அதோடு மட்டும் அல்லாமல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் திமுக கூட்டணியில் நீடிப்பது பற்றி எந்தவித உறுதியும் இல்லை. அதோடு மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்குவதாகவோ, திமுகவை மறுபடியும் ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பதாகவோ எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அதே போல் எடப்பாடி பழனிசாமி அரசை விமர்சித்து பெயரளவில் ஒரே ஒரு தீர்மானத்தை மட்டும் கூட்டத்தில் வைகோ நிறைவேற்றியுள்ளார். இப்படி வைகோவின் நடவடிக்கைகள் சஸ்பென்சாக உள்ளதால் திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா? என்கிற சந்தேகம் வலுத்துள்ளது.

click me!