நாங்குநேரி: கருணாநிதி போல விட்டுக்கொடுப்பாரா மு.க. ஸ்டாலின்..? பழைய ஃபிளாஷ்பேக்கைக் கிளறும் காங்கிரஸ்!

By Asianet TamilFirst Published Sep 9, 2019, 8:49 AM IST
Highlights

‘கருணாநிதியின் காரோட்டி’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவரை மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட வைக்காமல், அது திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி என்பதால், அக்கட்சிக்கே கருணாநிதி விட்டுக்கொடுத்தார். தற்போது இந்த பழைய நடைமுறையை மு.க. ஸ்டாலினுக்கு ஞாபகப்படுத்த காங்கிரஸ் தரப்பில் தயாராகிவருவதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

  திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளை விட்டுக்கொடுத்ததைப் பற்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் பேசும்போது கோடிட்டு காட்ட காங்கிரஸ்காரர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.


 நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவே இல்லை. அதற்குள் அந்தத் தொகுதியால் காங்கிரஸ் கட்சி மனக்கவலையில் உள்ளது. தங்களுடைய எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ததால் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தங்களால் போட்டியிட முடியுமா என்ற விசனத்தில் அக்கட்சி உள்ளது. நாங்குநேரியை கூட்டணி கட்சியான திமுக விட்டுதருமா என்ற எதிர்பார்ப்பிலும் அக்கட்சி இருக்கிறது. 
அண்மையில் நாங்குநேரியில் பேசிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ‘தனித்து போட்டியிட முடியாதா..?’ என்று ஏக்கத்தோடு கேள்வி எழுப்பினார். ஆனால், திமுகவின் தயவுஇன்றி வெற்றி சாத்தியப்படாது என்பதால், வெளிப்படையாக எதைப் பற்றியும் பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். தனித்து போட்டி என்று தீர்மானம் நிறைவேற்றிய நெல்லை கிழக்கு மாவட்ட தலைவருக்கு கட்சி தலைமை அவசரமாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும் நிலையில்தான் காங்கிரஸ் கட்சி உள்ளது.
என்றாலும் எப்படியும் மு.க. ஸ்டாலினின் மனம் மாறி, நாங்குநேரியைக் கொடுப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி இருக்கிறார். இந்நிலையில் முன்பு கருணாநிதி காங்கிரஸ் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் அத்தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுத்த விஷயங்களைப் பற்றி மு.க. ஸ்டாலினுடன் பேச முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
2007-ல் அதிமுக எம்.எல்.ஏ. மறைவால் மதுரை மத்திய மேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 100 தொகுதிகளில் பெற முடியாத நிலையில், எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மதுரை மேற்கில் போட்டியிட்டிருக்கலாம். ஆனால், அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிருந்ததால், அத்தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே விட்டுக்கொடுத்தார் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி. இதேபோல 2009-ல் நடைபெற்ற தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை விட்டுக்கொடுத்தது திமுக.
குறிப்பாக தொண்டாமுத்தூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. கண்ணப்பன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார். ‘கருணாநிதியின் காரோட்டி’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவரை மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட வைக்காமல், அது திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி என்பதால், அக்கட்சிக்கே கருணாநிதி விட்டுக்கொடுத்தார். தற்போது இந்த பழைய நடைமுறையை மு.க. ஸ்டாலினுக்கு ஞாபகப்படுத்த காங்கிரஸ் தரப்பில் தயாராகிவருவதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. 
ஆனால், 2006 - 2011-ம் ஆண்டுகாலத்தில் காங்கிரஸ் தயவில்தான் திமுக இங்கே முழுமையாக ஆட்சியில் இருந்தது. மத்தியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியும் இருந்தது. இதனால், திமுக - காங்கிரஸ் தலைமை இடையே நல்ல உறவும் புரிதலும் இருந்தது. இப்போது இரண்டுமே இல்லை என்பதால், பெரிய அளவில் ஒட்டுதலும் இல்லை; புரிதலும் இல்லை. எனவே காங்கிரஸின் இந்த முயற்சி பலனளிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

click me!