வெளியே வரமுடியாத நிலையில் இருக்கிறாரா பரூக் அப்துல்லா..? கருணாநிதி சிலைத் திறப்புக்கு வருவாரா மாட்டாரா?

By Asianet TamilFirst Published Aug 7, 2019, 9:37 AM IST
Highlights

டெல்லியில் தங்கியிருந்த பரூக் அப்துல்லா நிலை என்ன என்று மக்களவையில் திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. பரூக் அப்துல்லா வீட்டுக் காவலிலும் இல்லை, கைதும் செய்யப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
 


 மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பங்கேற்க மாட்டார் என்று  தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் முதல் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் மறைந்த கருணாநிதியின் நினைவு நாளையொட்டி திமுக சார்பில் இன்று விரிவான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை வாலாஜா சாலையிலிருந்து கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. 
மாலையில் கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள முரசொலி அலுவலகத்தில், கருணாநிதியின் சிலைத் திறப்பு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்துவைக்கிறார். இந்த விழாவிலும், இதையொட்டி நடைபெற பொதுக்கூட்டத்திலும் மம்தா பானர்ஜி பங்கேற்கிறார். இதேபோல காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதையடுத்து காஷ்மீர் தலைவர்கள் பலரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் தங்கியிருந்த பரூக் அப்துல்லா நிலை என்ன என்று மக்களவையில் திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. பரூக் அப்துல்லா வீட்டுக் காவலிலும் இல்லை, கைதும் செய்யப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
ஆனால், திடீரென்று ஊடகம் ஒன்றுக்கும் பேட்டியளித்த பரூக் அப்துல்லா, ‘தாம் வீட்டுக் காவலில் சிறைக்கப்பட்டிருப்பதாகக் கூறி” ஆவேசமாகப் பதில் அளித்தார். இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டப்படி சென்னையில் நடைபெற உள்ள கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் பரூக் பங்கேற்பாரா என்று கேள்வி எழுந்தது. காஷ்மீரில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கொண்டும். பரூக் அப்துல்லா தான் வீட்டுக் காவலில் இருப்பதாக கூறும் நிலையிலும், அவரால் சென்னைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
எனவே, இன்று சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பரூக் அப்துல்லா பங்கேற்கமாட்டார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

click me!