உள்ளாட்சி தேர்தலில் 100% திமுக ஜெயிக்குமா.? பொங்கல் பரிசுடன் ரூ.1000 கொடுக்காததால் திமுக எம்எல்ஏக்கு சந்தேகம்!

By Asianet TamilFirst Published Jan 22, 2022, 9:41 PM IST
Highlights

என்றாலும் அனைவரும் பாராட்டக் கூடிய வகையில் செயல்படக் கூடிய தமிழக முதல்வரின் வழிகாட்டுதல்படி செயல்பட்டால் நாம் 100 சதவீத வெற்றியை கண்டிப்பாக பெறலாம் என்று எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் நிதியும் வழங்கி இருந்தால், நமக்கு 100 சதவீதம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் இருந்திருக்கலாம் என்று திமுக எம்.எல்.ஏ. பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்புக்காக அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன. என்றாலும், அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, ஆளுங்கட்சி திமுக, மாவட்ட அளவில் வேட்பாளர்கள் பட்டியல் வரை தயார் செய்துவிட்டது. இதனையடுத்து திமுக அமைச்சர்கள், எம்,பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச்செயலாளர்கள் என பலரும் கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தக் கூட்டங்களில் கட்சியின் வெற்றிக்கான வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டனர். 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர பூத்கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நகர செயலாளர் ம.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினரும், சீர்காழி எம்.எல்.ஏ.வுமான பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், “சீர்காழி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. 24 வார்டுகளிலும் கட்சி தலைமை முடிவெடுத்து அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். கட்சி அறிவிக்கும் வேட்பாளருக்குப் போட்டியாக திமுகவை சேர்ந்தவர்கள் சுயேட்சையாகவோ வேறு எந்த வகையிலோ செயல்படக் கூடாது. கட்சியின் வேட்பாளர் வெற்றிக்கு எதிராக செயல்படக் கூடாது. போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு கூட்டுறவு சங்க பொறுப்புகள் வழங்க பரிசீலிக்கப்படும்.

தற்போது பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்த்து போல பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் நிதியும் வழங்கி இருந்தால், நமக்கு 100 சதவீதம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் இருந்திருக்கலாம். என்றாலும் அனைவரும் பாராட்டக் கூடிய வகையில் செயல்படக் கூடிய தமிழக முதல்வரின் வழிகாட்டுதல்படி செயல்பட்டால் நாம் 100 சதவீத வெற்றியை கண்டிப்பாகப் பெறலாம்” என்று எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

click me!