ராகுலை அடித்து ஓரம்கட்டிய பிரியங்கா.. உபியில் சோலோ பர்பாமன்ஸ்.. 70% புதுமுக வேட்பாளர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Jan 22, 2022, 6:40 PM IST
Highlights

இதேபோல ஷாஜகான்பூரில் பூனம் பாண்டேவை பிரியங்கா சந்தித்தார். பூனம் பாண்டே காவல்துறையினிரல் கையால் அடிவாங்கும் வீடியோ ஊடகங்களில் வைரல் ஆனது. அவர் ஒரு ஆஷா பணியாளர், முதல்வரிடம் சில கோரிக்கைகளை முன்வைக்க முயற்சித்தபோது காவல்துறையால் தாக்கப்பட்டார். 

உத்தர பிரதேச தேர்தலில் போட்டியிட 70% புதுமுகங்களுக்கு பிரியங்கா காந்தி வாய்ப்பு வழங்கியுள்ளார். அந்த வேட்பாளர்கள் அனைவரும் அவரின் நேரடி பார்வையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்  என்றும்,  ராகுல் காந்தியை ஓரம்கட்டி பிரியங்கா கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்றும் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர். 

5 மாநில தேர்தல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் உத்தரப் பிரதேச மாநில தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாஜகவின் வெற்றியை தடுக்கும் முகமாக காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. உத்தர பிரதேச தேர்தலில் இதுவரை வேட்பாளர்கள் அறிவிப்பில் மற்ற கட்சிகளை காட்டிலும் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது. அக்காட்சி இதுவரை இரண்டு பட்டியல்களில் 166 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் 70 சதவீதத்துக்கும் மேல் அதாவது 117 பேர் முதல் முறையாக தேர்தலை சந்திக்கும் புதுமுகங்கள் ஆவர்...

புதுமுகங்கள் தேர்வு: பிரியங்கா காந்தி தன் புதிய காங்கிரசில் புது முகங்களைதேடி தேடி செதுக்கி இருக்கிறார் என்றும், இப்போது அவர்களை பிரியங்கா களமிறங்குகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. தேர்வாகியிருப்பவர்களில் பத்திரிக்கையாளர்கள், ஆஷா பணியாளர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் நடிகைகள் இடம்பெற்றுள்ளனர். இந்த புதுமுகம் தேர்வு விவகாரத்தில் கட்சியோ, ராகுல் காந்தியே கூட தலையிட வில்லை என கூறப்படுகிறது. அமேதியில் " பையா ஜி " என்று அன்புடன் அழைக்கப்படும் பிரியங்காவின் முடிவே இறுதியானது என்றும், இந்த புதுமுகங்கள் காங்கிரஸ் சரித்திரம் படைப்பார்களா அல்லது வரலாறு மாற்றுவார்களா என்பதை தேர்தல் முடிவன்றே தெரியும், ஆனால் பிரியங்கா காந்தியை பொறுத்தவரையில் அவர்  முழுவீச்சில் இறங்கி பணியாற்றி வருகிறார். புதுமுக வேட்பாளர்கள் ஒவ்வொருவரையும் பிரியங்கா காந்தி பல சந்தர்ப்பங்களில் அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பு, அனுபவங்களின் அடிப்படையில் தேர்வு செய்துள்ளார்.

உன்னாவ் சம்பவம்- சிறுமியின் தாயார்: உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் 55 வயதான ஆஷா சிங்கை பிரியங்கா கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தித்தார். அப்போது அந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு பிரியங்கா காந்தி  உன்னாவ் நகருக்கு நேரடியாக சென்று குரல் கொடுத்தார். அப்போதிலிருந்து அவர் தனது பேச்சுக்களிலும், சமூக ஊடகங்களில் பெரும்பாலான பதிவுகளிலும் ஆஷா சிங்கை குறிப்பிட்டு வருகிறார். ஆனால் ஆஷா சிங் தேர்தலில் போட்டியிட தயாராக இல்லை என்றும், பிரியங்காவின் வற்புறுத்தலின் பேரில் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்போது ஆஷா சிங் உன்னாவ் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குகிறார். ஆனால் இதுவரை அவர் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ச்சனா கௌதம்: (நடிகை)  அஸ்த்தினாபூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அர்ச்சனா கௌதம் 2018 மிஸ் பிகினி பட்டத்தை வென்றார். தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானார், நவம்பர் 2011 இல் பிரியங்கா காந்தி அர்ச்சனாவை சந்தித்து காங்கிரசில் சேர அழைப்பு விடுத்தார். அவர் மீரட்டில் படிக்கும்போது பத்திரிகையாளராக வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும், ஆனால் மாடலாக பின்னர் நடிகையாக மாறியதாகவும் அர்ச்சனா கூறினார். தற்போது பிரியங்கா காந்தி அவரை அரசியல்வாதி ஆகியுள்ளார்.

நிடா அகமது:  (பத்திரிக்கையாளர்) பத்திரிகையில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார், நீடா அகமது பல தொலைக்காட்சி சேனல்கள் பணியாற்றி வந்தவர் ஆவார். முன்னதாக பிரியங்கா காந்தியை பல முறை சந்தித்திருந்தாலும் நவம்பர் மாதம் நடந்த சந்திப்பு அவரை காங்கிரஸ் வேட்பாளராக்கியுள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக பல சந்திப்புகளுக்கு பிறகு ஜனவரி 11ஆம் தேதி நீடா ஒரு எம்எல்ஏவாக வேண்டுமென்ற ஆசையில் பத்திரிக்கை துறையை உதறிவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜனவரி 13 அன்று கட்சி அவரை சம்பல் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சல்மான் இம்தியாஸ்: (மாணவ தலைவர்)  2018 ஆம் ஆண்டில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் சமூகப்பணி துறையில் ஆராய்ச்சி மாணவராக இருந்தவர் ஆவார். மாணவ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 44 ஆண்டுகளுக்குப் பிறகு அலிகார் மாணவர் ஒருவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அலிகாரில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களும் அவருக்கு வாக்களித்திருந்தனர். அவர் கண்ணையா குமாருக்கும் நெருக்கமானவராக இருந்தார். அவரும் கண்ணையாவைப் போலவே சிறந்த  பேச்சாளர் ஆவார். எனவே அவரை காங்கிரஸ் கட்சிக்கு அழைத்து வரும் பொறுப்பை அரியானா பொறுப்பாளர் விவேக் விஷாலிடம் பிரியங்கா ஒப்படைத்திருந்தார். இந்நிலையில் நவம்பர் 25 அன்று சல்மான் இம்தியாஸ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நவம்பர் 26 என்று பிரியங்கா அவரை சந்திக்க அழைத்தார், முதல் சந்திப்பிலேயே அவருக்கு அலிகாரில்  சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பூனம் பண்டிட் : (விவசாய சங்கம், விளையாட்டு வீரர்) புலந்த்ஷாஹரில்  உள்ள இஸ்மாயில்பூரில் வசிக்கும் பூனம் பண்டிட்டின் தந்தை ஒரு விவசாயி ஆவர். அவர் இறந்த பிறகு அவரின் அம்மா எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார், ஹரியான்வி நடன கலைஞரான சப்னா சவுத்ரியின் பாதுகாவலராக பூனம் பண்டிட் இருந்தார். அந்த பணியிலிருந்து சர்வதேச துப்பாக்கி சுடும் வீரராக உயர்ந்தார். நேபாளத்தில் நடைபெற்ற கிராமப்புற இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2018 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடு பந்தய போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். பின்னர் விவசாய இயக்கத்தில் சேர்ந்தார். அப்போது பிரியங்காவை சந்தித்தார், இந்நிலையில் சயானா தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். 

பூனம் பாண்டே: ( ஆஷா பணியாளர்)  ஷாஜகான்பூரில் பூனம் பாண்டேவை பிரியங்கா சந்தித்தார். பூனம் பாண்டே காவல்துறையினிரல் கையால் அடிவாங்கும் வீடியோ ஊடகங்களில் வைரல் ஆனது. அவர் ஒரு ஆஷா பணியாளர், முதல்வரிடம் சில கோரிக்கைகளை முன்வைக்க முயற்சித்தபோது காவல்துறையால் தாக்கப்பட்டார். அந்த சம்பவத்துக்குப் பிறகு பிரியா கார்த்தி  2021 நவம்பர் 16-ஆம் தேதி பூனம் பாண்டேவை சந்தித்த அவர்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்தார். அவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார். பிரியங்கா காந்தி பூனம் பாண்டேவை ஷாஜகான்பூர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறார். அவர் இப்படியே ஒவ்வொரு வேட்பாளரையும் பொதுக்கூட்டம் போராட்டக் களங்களில் இருந்து தேர்வு செய்துள்ளார்.  இதில் போட்டியிடும் 70% பேர் புதுமுகங்கள் ஆவர். இது புது காங்கிரஸ்.. புது ரத்தம்.. புது வேகம் என்ற முழக்கத்துடன் பிரியங்கா செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!